திருநெல்வேலி: தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு மழைப் பொழிவு இல்லாமல் இருந்து வந்தது. மேலும் வழக்கத்துக்கு மாறாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதுபோன்ற சூழலில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை சற்று தீவிரமடைந்து உள்ளது.
இதனால் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக னத்துறை தடை விதித்து உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும், செங்கல் தேரி பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை: குற்றாலத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்!
தொடர் மழை காரணமாக இன்றும் (அக். 2) அருவியில நீர்வரத்து குறையாததை அடுத்து மூன்றாவது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு அம்பாசமுத்திரம் வனத்துறையினர் தடை விதித்தனர். அதேசமயம் இன்று காந்தி ஜெயந்தி விடுமுறை, காலாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஆனால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். மூன்று நாட்களாக தடை இருந்த போதிலும் அதுகுறித்து வனத்துறை முறையான முன்னறவிப்பு வழங்கவில்லை என சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் நீண்ட தூரத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!