திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகள் மாரியம்மாள் (19). சாலையில் பழைய பேப்பர் உள்ளிட்ட குப்பைகளைச் சேகரிக்கும் வேலை பார்த்துவரும் மாரியம்மாள் ஏப்ரல் 21 அன்று வழக்கம்போல் முக்கூடல் அடுத்த சேரன்மகாதேவி சாலையில் குப்பை சேகரித்துள்ளார்.
பெண்ணின் நற்செயல்
அப்போது, சாலையில் கிடந்த பர்ஸை எடுத்துப் பார்த்தபோது உள்ளே 58 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், கைப்பேசி இருந்தது.
அதைப்பார்த்த அவர் அதன்மீது நாட்டம் கொள்ளாமல் முக்கூடல் காவல் நிலையத்தில் பர்ஸை ஒப்படைத்தார்.
பிறகு பர்ஸில் இருந்த ஆதார் எண்ணை வைத்து காவல் துறையினர் அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்தனர்.
பாராட்டிய காவல் துறை
அதன்படி சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஜாஷ்மின் நிஷாவிடம் பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. பிறகு காவல் துறையினர் இளம்பெண் மாரியம்மாளை நேரில் அழைத்துப் பாராட்டினர்.
மேலும், பணம் மீது மோகம் கொள்ளாமல் அதை உரியவரிடம் கொண்டுசேர்த்த மாரியம்மாளின் செயல், சமூக ஆர்வலர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்தச் சூழலில் மாரியம்மாளை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேற்று (ஏப். 23) நேரில் அழைத்துப் பாராட்டி, அவருக்குச் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தினார்.
அதேபோல் கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி சார்பில் மாரியம்மாளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாக வழங்கினார்.