நெல்லை: நெல்லையில் பெய்துவந்த கனமழை குறைந்தது. இதனால், வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அளவு 50 ஆயிரம் கன அடியில் இருந்து 17,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைய தொடங்கியது. நெல்லை சந்திப்பில் தேங்கிய தண்ணீரில் ஆண் சடலம் மிதக்கும் சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரபிக்கடலில் உருவான வளிமண்டலத்தில் சுழற்சி காரணமாக இரண்டு நாட்களாக பெய்த கன மழை தென் மாவட்டங்களை புரட்டிப்போட்டது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் மூலைக்கரைப்பட்டியில் சுமார் 70 செ.மீ. வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக, அணைகளுக்கு பல மடங்கு நீர்வரத்து அதிகரித்தது.
எனவே பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து சுமார் 50,000 கண்ணாடி வரை தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இது தவிர, மழைநீர் மற்றும் காட்டாற்று வெள்ளம் என நேற்று சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் சென்றதால் கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அதேபோல், வெள்ள நீர் கால்வாயில் இருந்து சோதனை அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பல இடங்களில் கால்வாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர், இரு கரைகளைத் தாண்டி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
இதனால், நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு வண்ணாரப்பேட்டை, கொக்கிரகுளம், டவுன், பேட்டை மேலப்பாளையம் போன்ற பகுதிகளில் கடுமையான வெள்ளை சேதம் ஏற்பட்டது. வண்ணாரப்பேட்டையில் தண்ணீரில் தத்தளித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். மேலும், நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு சுமார் 7 அடிக்கு சாலையில் தண்ணீர் தேங்கியால் அங்கு மாட்டிக்கொண்ட மக்கள் பரிதவித்தனர்.
ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரில் தத்தளித்த சிலர் மீட்கப்பட்டனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், நேற்று மாலை முதல் நெல்லையில் மழை வெகுவாக குறைந்தது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று அணைகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 17 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
143 அடி கொள்ளளவு காரையாறு அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. காரையாறு, சேர்வலாறு அணைகளுக்கு வினாடிக்கு 8400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 11,560 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 109 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் நிலையில், அதே அளவு தண்ணீர் உபரிநீராக அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்துவிட்டது. குறிப்பாக, நேற்று கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளியேறிய தண்ணீர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்தது.
இன்று அதிகாலை ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி இருந்த தண்ணீர் வடியத் தொடங்கியது. அதேபோல், நிலை சந்திப்பு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரும் பெருமளவு பதிந்து விட்டதால், தற்போது அங்கு மாட்டிக்கொண்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மாநகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் வடிய தொடங்கியுள்ளதால் அடுத்த கட்டமாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அரசு அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய தண்ணீரில் தான் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீட்புப்படையினர், அந்த சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் அனுப்பி வைப்பு..!