தமிழ்நாடு முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் வெயிலின் வெப்பம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வெலி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, கடந்த 10 நாட்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவாகியுள்ளது.
இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் வெயிலில் வெளியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இந்த வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் ஆங்காங்கே நிழலைத் தேடி ஓடுகின்றனர். மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஆங்காங்கே குடிநீர் பிரச்னை தலைதூக்கி வருகிறது.