நெல்லை: களக்காடு காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பெருமாள். இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் சந்திக்கும் புகைப்படத்தையும், அருகில் நடிகர் பிரபு புகைப்படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் புகைப்படத்திற்கு மேல் இந்த இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், தப்பு செஞ்சது எங்க ஆட்சியில் இல்ல அதிமுக ஆட்சியில்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, முதலமைச்சரின் படத்திற்கு கீழ் நெல்லை பெருமாள் காவல் சீருடையுடன் இருக்கும் தனது புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த கருத்து பலரின் சமூக வலைதளப்பக்கங்களில் பகிரப்பட்ட நிலையில், காவல் சிறுடையில் இருந்து சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவலரே இதுபோன்ற செயலை செய்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளருமான மாலை ராஜா நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் காவலர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பெருமாள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.சம்பவம் குறித்து ஈடிவி பாரத் தமிழ் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது பதிலலித்து பேசிய அவர், பெருமாள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பெருமாள் பணிடியை நீக்கம் செய்யப்பட்டதை அவர் உறுதி செய்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு பயந்து செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டதுபோல் நடிப்பதாக மீம்ஸ்கள் வெளியாகின. குறிப்பாக செந்தில் பாலாஜி, மு.க ஸ்டாலின், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் வட்டாரத்தையும் புகழ்ந்தும், இகழ்ந்தும் மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் தெறிக்கவிடப்பட்டு வருகிறது. இதை பார்த்த காவலர் பெருமாளும் தனது திறமையை மீம்ஸ் வாயிலாக வெளிப்படுத்தி பணிடியை நீக்கத்தை பரிசாக பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் கமெண்டுகள் கிசுகிசக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சினிமா திரைப்படங்களில் வரும் வசனங்களை ஒப்பிட்டும் திரைப்பட காட்சிகளை ஒப்பிட்டும் அமைச்சரை பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் ஒட்டுமொத்த பாஜக கூட்டத்தையும் அமைச்சர் செந்தில் பாலாஜி கதிகலங்க செய்து விட்டதாகவும் இதனால் பாஜவினர் செந்தில் பாலாயை பழிவாங்குவதாகவும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதேபோல் மருத்துவமனையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் நேரில் சந்தித்தது குறித்தும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஒரு சாரார் குற்றவாளியை முதலமைச்சர் நேரில் சந்திக்கலாமா என்று கேள்வி எழுப்பி மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் கட்சித் தலைவர் என்ற முறையில் பொறுப்புடன் மு.க ஸ்டாலின் அமைச்சரை நேரில் சந்தித்ததாக அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பகிர்ந்து வருகின்றனர். இது போன்ற நிலையில் அரசு பணியில் உள்ள காவலர் சீருடையுடன் முதலமைச்சரை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்து அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது ஒருபக்கம் இருக்க, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பாஜக மீதும், மத்திய அரசு மீதும், கடும் கோபத்தில் உள்ளனர். எனவே எந்த நேரமும் திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடலாமென தகவல்கள் வெளியானது. அதே சமயம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தேவையில்லாமல் போராட்டத்தில் இறங்கினால் பிரச்சனை ஏற்படும் என்பதால் தொண்டர்களை அமைதி காக்கும்படி திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே இதுவரை எங்கும் போராட்டம் நடைபெறவில்லை இருப்பினும் அடுத்தடுத்து செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை காரணமாக எந்த நேரமும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் காவலரே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக பேஸ்புக்கில் முதலமைச்சரை விமர்சித்து பதிவிட்ட சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வழி தவறி ஊருக்குள் வந்த குட்டியானை: உணவளித்த பழங்குடியின மக்களின் நெகிழ்ச்சி வீடியோ!