திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்தாண்டு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பட்டமளிப்பு விழா இன்னும் நடத்தப்படவில்லை. கிட்டத்தட்ட 43,000 மாணவ-மாணவிகள் பட்டம் பெற தகுதி இருந்தும் ஆளுநரின் தேதி இல்லாததால் பட்டம் பெறாமல் காத்திருக்கின்றனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி என நான்கு மாவட்டங்களில் 110-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தில் 28 மற்றும் 29 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆளுநர் மாணவ மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கினார்.
ஆனால் அதன் பிறகு கடந்த 2022-ல் ஆராய்ச்சி படிப்பு மற்றும் உயர் கல்வி முடித்தவர்களுக்கு தற்போது வரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை முடித்த 24,300 மாணவர்களும், முதுகலை படிப்பை முடித்த 5,500 மாணவர்களும், மற்றும் 30 துறைகளில் ஆராய்ச்சி படிப்பில் தகுதி பெற்ற முனைவர்கள் 1000 பேர் வரை இன்னும் பட்டம் பெறாமல் காத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பட்டம் பெறக் காத்திருக்கும் மாணவர்களின் பட்டமளிப்பு விழா நடைபெறாததைக் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் அவர்களிடம் கேட்டபோது, "தமிழக ஆளுநருக்குக் கடந்த அக்டோபர் மாதம் பட்டமளிப்பு விழா நடத்தத் தேதி கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். இந்த ஜூன் மாத இறுதியில் ஆளுநர் கலந்துகொண்டு விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. தேதி உறுதியான பிறகு அறிவிக்கப்படும்" எனத் துணைவேந்தர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாததைக் குறித்து செய்தி ஒளிபரப்பான நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூலை மாதம் பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடைபெறும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.