நெல்லை பாளையங்கோட்டை வீரமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் என்ற செல்வக்கனி. இவர் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிவருகிறார். இவர் தனது உறவினர் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றுவதாகவும் அவர் உதவியுடன் அங்கு வேலை வாங்கித்தருவதாக தனது நண்பர்கள், தெரிந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த சேதுராமலிங்கம் என்ற இளைஞர் தான் எம்.பி.ஏ. முடித்துள்ளதாகக் கூறி சான்றிதழ் அனைத்தையும் அவரிடம் கொடுத்து பணி வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.
இதற்கு செல்வக்கனி, 10 லட்சம் ரூபாய் தர வேண்டும், முதல்கட்டமாக நான்கு லட்சம் முன்பணமாக கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சேதுராமலிங்கம் நான்கு லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.
ஆனால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிக்கான ஆணை வரவில்லை. இதைத்தொடர்ந்து கொடுத்த பணத்தை அவர் செல்வக்கனியிடம் கேட்டுள்ளார். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துவந்த நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் தகராறும் ஏற்பட்டுள்ளது. பின்னர் சேதுராமலிங்கம் இது குறித்து நெல்லை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
புகாரை விசாரித்த காவல் துறையினர் பெருமாளை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் 20 பேரிடம் இதுபோன்று ஏமாற்றி 12 லட்சம் ரூபாய்வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.