நெல்லை மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டதில் பெரும் குளறுபடி நடந்துள்ளதாக வழக்குரைஞர் பிரம்மா குற்றஞ்சாட்டியிருந்தார். அதாவது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நெல்லை அரசு தலைமை மருத்துவமனை பொது தகவல் அலுவலருக்கு சில விளக்கங்கள் கேட்டு மனு அளித்திருந்தார்.
அதில், "நெல்லை மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் கரோனோவால் 285 பேர் மட்டும் உயிரிழந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் 185 பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 100 பேர் கணக்கில் காட்டவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நெல்லை அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வர் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நெல்லையில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் எந்தவித தவறும் நடக்கவில்லை. அண்டை மாவட்டங்களின் எண்ணிக்கையை சேர்த்துதான் 285 பேர் உயிரிழந்ததாக பொது தகவல் அலுவலர் பதில் அளித்திருக்கிறார்.
அதாவது கடந்த மார்ச் 21ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 25ஆம் தேதிவரை நெல்லை மாவட்டத்தில் 145 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரும், தென்காசி மாவட்டத்தில் 88 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 33 பேரும் என மொத்தம் 285 பேர் நெல்லை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்" எனக் விளக்கினார்.
அதாவது அண்டை மாவட்டமான விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிகள் சிலரும் போக்குவரத்து பிரச்னை காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.