நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்விஜய். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அவரது பெரியம்மா வசித்துவருகிறார். உடல்நலக்கோளாறு காரணமாக அவரது பெரியம்மா நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
மாதத்திற்கு ஒருமுறை அவருக்கான மருந்துகளை நெல்லையிலிருக்கும் அருண் வாங்கி அனுப்புவார். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மருந்துகளைக் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மருந்துகள் தீர்ந்து இரண்டு நாள்களான நிலையில் அருணின் பெரியம்மாவின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து அருண் நெல்லை துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் வாட்ஸ்அப் மூலம் இது குறித்து கோரிக்கைவிடுத்துள்ளார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய துணை ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மருந்துகளை வாங்கியதுடன் விரைவு அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) மூலம் அனுப்பினால் காலதாமதம் ஆகும் என்பதால், ஓசூருக்குச் செல்லும் சரக்கு வாகனம் மூலம் மாத்திரைகளை அனுப்பிவைத்தார்.
நேற்று பகலில் மாத்திரைகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு உரியவரிடம் மருந்துகள் சென்று சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அருண்விஜய் நன்றியோடு தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் கரோனாவிலிருந்து குணமடைந்த 20 பேர்!