திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்தல் முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடிக்கு அனுப்பிய வாக்கு இயந்திரங்களின் எண்களும், வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த வாக்கு இயந்திரங்களின் எண்களும் சரிபார்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் பொதுப் பார்வையாளர் விஜய சுனிதா, தேர்தல் அலுவலர் நடேசன் ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் ஒப்புதலோடு பலத்த பாதுகாப்பு கொண்ட அறையில் வாக்கு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது பூட்டி சீல் வைக்கப்பட்ட அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய வீரர்கள் 24 மணி நேர சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த பணியில் சுமார் 200 காவலர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் நடேசன், நாங்குநேரி தொகுதியில் மொத்தமுள்ள 299 வாக்குச் சாவடிகளிலும் 66.35 % வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 1,70,624 வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபட்ட சர்வீஸ் வாக்குகள் 278, இதில் 36 வாக்குகள் தற்போது வரை பெறப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு வரை சர்வீஸ் வாக்குகள் பெறப்படும். நாங்குநேரி தொகுதியில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்களுடன் கோட்டாச்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் பயன்படுத்தபடவுள்ளது என தெரிவித்தார்.
மேலும் அவர், மொத்தம் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மாநகர ஆயுதப் படையினர் உட்பட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்புப் பணி நடைபெறும் என கூறினார்.
இதையும் படிங்க:வாக்களித்த இரண்டு வயது சிறுமி!