திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி பழைய கோயில் தெருவில் வசித்துவருபவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் சைமன். இவரது வீட்டில் புத்தாண்டு அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 51 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுபற்றி சைமன் மகன் ஆம்ஸ்டர் சைலஸ் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் வள்ளியூர் உள்கோட்ட உதவி கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது பாவாடை அணிந்த நபர் சுவரில் ஏறி குதிக்கும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து உவரி காவல் துறையினர் பாவாடை கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
இடையன்குடி அருகே அநாதையாக நின்றிருந்த டாடா மினி லாரியைச் சோதனை செய்ததில் துப்பு துலங்கியது.
இதையடுத்து சந்தேகத்தின்பேரில் தென்காசி மாவட்டம் தட்டான்பட்டியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் மகன்கள் பெஞ்சமின் (33), ஈசாக் (31), பெஞ்சமின் மனைவி காளிஸ்வரி (31) ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இடையன்குடியில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில், மேற்கண்ட மூன்று பேரும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு வாடகைக்கு எடுத்து கொள்ளைச் சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது தெரியவந்தது.
பின்னர் மூவரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: சிறுமியை நாய் கடித்த விவகாரம்: உரிமையாளர் கைது