திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.
தற்போது நோய்த் தொற்று படிப்படியாகக் குறைய தொடங்கியதன் காரணமாக, ஊரடங்கில் பல தளர்வுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. அதில் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று (ஜூலை 5) முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற சிவாலயமான நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, இன்று (ஜூலை 5) காலை 5.30 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள்
- கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
- தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்.
அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில் நடை திறக்கப்படும் முன்னரே கோயில் முன் பக்தர்கள் அதிகாலை முதல் காத்திருந்து, பின் கோயிலுக்குள் சென்றனர்.
திருவனந்தல் கஜபூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளின்போது பக்தர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தேவாரம், திருவாசகம் பாடல்கள் பாடிய பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் மகிழ்ச்சியை, வெளிப்படுத்தும் விதமாக பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு கோயிலைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடை திறப்பு: சூடம் ஏற்றி தேங்காய் உடைத்த மதுப்பிரியர்