திருநெல்வேலி: பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் உள்ள குறைகளை 24 மணி நேரத்தில் களைவதற்காக நேற்று (ஜூன் 29) 'வணக்கம் நெல்லை' என்ற கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தொடங்கிவைத்தார்.
இச்சேவையானது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் செயல்பட்டுவருகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:
“வணக்கம் நெல்லை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள 9786566111 என்ற எண்ணைப் பயன்படுத்தி, 24 மணி நேரமும் பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.
இதன்மூலம் புகார் தெரிவிப்பவர்களுக்கு, அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பின் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தகவல்கள் அனுப்பப்படும்.
பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து அனைத்து குறைகளையும் வாட்ஸ்அப் அல்லது செல்போன் வாயிலாகத் தெரிவிக்கும் வகையில் ‘வணக்கம் நெல்லை’ என்ற புதிய கட்டுப்பாட்டு அறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
புகார்களின் அடிப்படையில் உடனடியாகத் தீர்வுகள் அளிக்கப்படும். பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் இதுபோன்ற செல்போன் சேவை நடைமுறையில் இருந்தாலும், மாவட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டு செல்போன் சேவையை முதன்முதலில் திருநெல்வேலி மாவட்டத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.