திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் நிரம்பி உபரிநீர் அதிக அளவில் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தொடர் மழையால் பாளையங்கோட்டை அடுத்த கக்கன் நகரில் லட்சுமண பெருமாள் மற்றும் மாரிசெல்வம் ஆகியோரது வீடுகள் இடிந்து சேதம் ஆகியுள்ளன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து சென்றனர். வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 3 பேர் கொண்ட அமைச்சர் குழு இன்று (ஜன.14) மதியம் நெல்லை மாவட்டம் வந்தடைகிறது.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட அமைச்சர் குழு, வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து சேதங்கள் குறித்து கணக்கெடுக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தொடர் கனமழை: குற்றால அருவிகளுக்குச் செல்ல 4 நாள்களுக்கு தடை!