நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த 1.09.2017 அன்று அரவிந்த் டிரான்ஸ்போர்ட் என்ற தனியாருக்குச் சொந்தமான பேருந்தில் நெல்லையிலிருந்து தூத்துக்குடி சென்றுள்ளார். அப்போது, அவரிடமிருந்து கட்டணமாக ரூ. 25 வசூலிக்கப்பட்டது.
அரசாணைப்படி நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு செல்ல 24 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பதால் இசக்கிமுத்து நடத்துனரிடம் முறையிட்டுள்ளார். ஆனால், நடத்துனர் சரிவர பதிலளிக்காததால் தனக்கு மிகுந்து மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், தனக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நஷ்ட ஈடு கோரி இசக்கிமுத்து நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய தலைவர் தேவதாஸ், உறுப்பினர்கள் சிவன் மூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் அடங்கிய அமர்வு உரிய விளக்கம் அளிக்கும்படி சம்மந்தப்பட்ட அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் தூத்துக்குடி நெல்லை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்த பஸ் நிறுவனம், மனுதாரர் கூறியபடி அரசாணையை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றும் அவருக்கு மன உளைச்சல் ஏற்படும்படி எவ்வித சம்பவமும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தரப்பில் இதுதொடர்பாக 16.05.2018அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மனுதாரரை அழைத்தும் அவர் ஆஜராகவில்லை எனவும், மோட்டார் வாகன ஆய்வாளர் நடத்திய விசாரணையில் மனுதாரர் கூறிய சம்பவம் உண்மை இல்லை எனவும் பதில் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் சரியான ஆதாரம் இல்லாததால் மனுதாரர் இசக்கிமுத்துவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அவரிடம் வசூலிக்கப்பட்ட ஒரு ரூபாய் கட்டணத்தை திரும்ப செலுத்துவதுடன் நஷ்ட ஈடாக 15,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் வழங்க அரவிந்த் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அத்தொகையை ஆறு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
நம்மைச்சுற்றி அரசு மற்றும் தனியார் சேவைகளில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் சூழ்நிலையில், பஸ் நடத்துனர் ஒரு ரூபாய் கூடுதலாக கட்டணம் வசூலித்த காரணத்திற்காக அந்நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து ஒரு ரூபாய் கட்டணத்தைப் போராடி பெற்ற இசக்கிமுத்துவின் செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்!