திருநெல்வேலி, வண்ணாரபேட்டையை சேர்ந்தவர் ராஜாராம். இவர் தாழையூத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப் படாததால் அக்கம் பக்கதினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். விஷம் அருந்தி தூக்கில் தொங்கிய ராஜாராமை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தாழையூத்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், ராஜாராமின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் அவர் எழுதிய கடிதம் ஒன்றையும் காவலர்கள் கைப்பற்றினர். அதில், "தனக்கு உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதற்கு யாரும் காரணம் இல்லை" என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தகராறு காரணமாக ஒரு மாதம் காவலர் குடியிருப்பில் தனியாக தங்கி இருந்துள்ளார். குடும்பத் தகராறில் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது உயர் அலுவலர்களின் அழுத்தம் காரணமாக இறந்தாரா உள்ளிட்ட கோணங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.