நெல்லை: அஞ்சுகிராமம் அடுத்த விஸ்வநாதபுரம் ஊரில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருபவர் ஜேம்ஸ் ராஜன். இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்பது மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் தனக்கு பல்சர் பைக் வேண்டும் எனவும் அதை ஓட்டி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஜேம்ஸ் ராஜன் தனது கடையிலிருந்த பல்சர் பைக்கை ஓட்டிப் பார்க்க கூறியுள்ளார். உடனே அந்த மர்ம நபர் தான் ஓட்டி வந்த ஸ்கூட்டி பைக்கை அவரது கடை முன்பு நிறுத்திவிட்டு பல்சர் பைக்கை ஓட்டி சென்றுள்ளார்.
ஆனால் ஓட்டிச் சென்றவர் வெகு நேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் ஜேம்ஸ் ராஜன் அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியில் இருந்து ஆர்சி புக் மற்றும் இன்சூரன்ஸ் முகவரி குறித்து விசாரித்துள்ளார்.
அது கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை சேர்ந்த நபரின் ஸ்கூட்டி என தெரியவந்தது. இதனையடுத்து அந்த முகவரிக்கு தொடர்பு கொண்டபோது தனது ஸ்கூட்டி பைக் திருட்டு போனதாகவும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
உடனே ஜேம்ஸ் ராஜன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பழவூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் திருட்டு பைக்கை ஓட்டி வந்து கடையில் விட்டுவிட்டு அதே இடத்தில் இன்னொரு விலை உயர்ந்த பைக்கையும் திருடிச் சென்ற மர்ம திருடனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடி வருகிறார்கள். திரைப்படங்களில் வரும் காமெடி காட்சியை போன்று ஓட்டி பார்ப்பதாக கூறி பைக்கை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:போலீஸ் என கூறி கட்டிட ஒப்பந்ததாரரிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்கள்