மத்திய அரசு தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டிக் கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரகப் பகுதிகளில் கழிவறை கட்ட இடவசதி இல்லாத குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களில் உள்ள மக்களின் நலனுக்காக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொது கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதார ஊரகம் மற்றும் பொதுக் கழிவறையின் பயன்பாடு, பராமரிப்பு தொடர்பாக தேசிய அளவில் சிறந்த மாவட்டங்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அளவில் முதல் மாவட்டமாக நெல்லை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று (அக்.2) நடைபெற்றது.
நெல்லையில் இருந்தபடி காணொலி கூட்டரங்கு மூலம் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடமிருந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் விருதை பெற்றுக்கொண்டார். மேலும் அவர் விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கழிவறைகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இத்திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் தமிழக அளவில் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், “நெல்லை மாவட்டத்தில் தற்போது கரோனோ பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொற்று வேகமாக பரவுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விஷயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பெண் உள்பட மூன்று பேர் கைது!