நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இயங்கிவரும் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரி நேற்று முன் தினம் வழக்கம்போல் தகர்க்கப்பட்ட கற்களை இயந்திரம் மூலம் தள்ளும் பணிகள் நடைபெற்று வந்தன.
லாரி டிரைவர்கள் ராஜேந்திரன்(35), செல்வகுமார் (30), ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன் (40), விஜய் (27), செல்வம்(27), லாரி கிளீனர் முருகன்(25) ஆகிய ஆறு பேர் கற்களை அள்ளும்போது சுமார் 300 அடி உயரத்தில் இருந்து திடீரென பாறைகள் சரிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், காவலர்கள் இணைந்து நடத்திய தொடர் மீட்புப் பணியில் ஹிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் விஜய், முருகன் இருவரும் நேற்று காலை உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ள நான்கு பேரில் செல்வம் மட்டும் வெளிப்பகுதியில் முக்கால் பகுதி உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியபடி தன்னை காப்பாற்றுமாறு சுமார் 17 மணி நேரம் கூக்குரலிட்டபடி உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார். இருப்பினும், அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுவதால் அவரை மீட்க முடியாமல் வீரர்கள் திணறினர்.
ஒருவழியாக 17 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வீரர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி செல்வத்தை உயிருடன் மீட்டு, உடனடியாக ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்தும் செல்வம் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை அறிந்த உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தொடர்ந்து மீதமுள்ள மூன்று பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. செல்வம் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட 17 மணி நேரமாக இரவு, கடும் வெயில் என நிலைமையை சமாளித்து எப்படியாவது உயிர் பிழைத்து விட வேண்டும் எனப் போராடி, அவர் உயிருடன் மீட்கப்பட்டும் உயிரிழந்த சம்பவம் அனைவரிடமும் சோகம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் செல்வம் தலையாரி வேலைக்கு மனு அளித்து, அவருக்கு தலையாரி வேலை கிடைத்துள்ளது. சம்பவம் நடந்த அன்று பணிகளை நிறைவு செய்துவிட்டு மறுநாள் அரசு வேலையில் சேர்வதற்காக அவர் நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரவு பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். அவரை உயிருடன் மீட்டும் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் இறந்த செல்வத்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.