இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை ரசிக்காதவர்கள் இப்பூவலகில் யாரும் உண்டா என்ன? இருந்தபோதிலும் இப்போது நகரமயமாதலால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள பாடுபடுகையில், நம்மை சுற்றி வாழும் பிற உயிரினங்களை மறந்துவிட்டோம் என்றே சொல்லலாம்.
ஆனால், நம்மில் சிலர் இதற்கு மாற்றாக பல முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றனர். அப்படி திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு தம்பதி ஆறு வருடங்களாக 200க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு உணவு அளித்துவருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த தம்பதி வாயில்லா ஜீவன்கள் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டவர்களாக இருக்கின்றனர். வாய் பேச முடியாத பருவத்தில் குழந்தைகள் தங்கள் பசியை போக்கிக் கொள்ள எவ்வாறு அழுது அடம் பிடிக்கிறதோ, அது போல எல்லா வாயில்லா ஜீவன்களும் தங்கள் பசியை போக்கிக் கொள்ள ஒவ்வொரு உடல் மற்றும் குரல் அசைவுகளை தனக்கே உரித்தாக்கிக் கொண்டிருக்கும். இதை நன்கு அறிந்த தமிழரசி, கணேசமூர்த்தி இருவரும், தினமும் தங்கள் வீடுகளில் பறவைகளுக்கு உணவு வைத்து வந்துள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் பின்பகுதியில் உள்ள கொய்யா மரத்தில் காய்த்துத் தொங்கிய கொய்யாப்பழத்தை இரண்டு கிளிகள் கொத்தித் தின்றுள்ளது. அப்போது பழம் தீர்ந்து போனதால் பசி அடங்காமல் கீச் கீச் என்ற சத்தத்துடன், ஏக்கத்தோடு அந்தக் கிளிகள் திரும்பி சென்றதை பார்த்து தமிழரசி மனம் வருந்தியுள்ளார். அன்றிலிருந்து தங்கள் வீட்டு மொட்டை மாடியில் தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேளை கிளிகளுக்கு சாப்பாடு வைக்க தொடங்கி உள்ளனர்.
அதன்படி அதிகாலை வேகமாக எழுந்து கிளிகளுக்கு என்று தனியாக அரிசியை வேகவைத்து சாப்பாடு ரெடி செய்கிறார் தமிழரசி. பின்னர் பாதி வெந்த நிலையில் உள்ள அந்த சோற்றை மொட்டை மாடிக்கு எடுத்து சென்று தடுப்புச் சுவரின் இருபுறமும் கிளிகள் வந்து அமர்ந்து உண்ணும் வகையில் இடைவெளி விட்டு வைக்கிறார். வாய் பேச முடியாவிட்டாலும் தன்னை சுற்றி நடக்கும் சம்பவங்களை அறிவாற்றலுடன் கவனிக்கும் திறன் கொண்ட கிளிகள், தமிழரசி சோறு எடுத்து மாடிக்கு வரும் அடுத்த நொடியே அதை மோப்பம் பிடித்து சங்கர் நகர், அதைச் சுற்றியுள்ள சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட கிளிகள் தமிழரசியின் இல்லத்தை தேடி வருகிறது.
பொதுவாக கிளிகளை காடுகளில் தான் பார்க்க முடியும், பனை மரம் உள்ளிட்ட மரங்களில் ஆழமான துளை ஏற்படுத்தி அதில் கிளிகள் தங்கும். அதேபோல் வீடுகளில் கூண்டுக்குள் வைத்து கிளிகளை பொதுமக்கள் வளர்த்து அதற்கு பேசவும் கற்றுக் கொடுப்பார்கள். ஆனால் ஒரே நேரத்தில் இதுபோன்று 200க்கும் மேற்பட்ட கிளிகள் ஒரே இடத்தில் அணிவகுத்து உணவு அருந்தும் காட்சிகளை பெரும்பாலும் பார்க்க முடியாது. ஆனால் தமிழரசி இல்லத்தில் இந்த காட்சிகளை பார்க்க முடியும் என்பதால் அப்பகுதி மக்களும் தமிழரசியின் இந்த செயலுக்கு எந்தவித தொந்தரவும் கொடுப்பதில்லை.
கிளிகளின் வரவுக்கு ஏற்ப தமிழரசியின் இல்லத்தை சுற்றிலும் இயற்கையான அமைப்புடன் ஏராளமான மரம் செடிகள் உள்ளன. குறிப்பாக வீட்டின் பின்புறம் சவுக்கு மரங்கள் இருப்பதால் அந்த மரக்கிளைகளில் அனைத்து கிளிகளும் ஒன்று கூடுகின்றன. பின்னர் தமிழரசி சாப்பாடு வைத்து முடித்த மறுகனமே அங்குமிங்கும் பறந்தபடி தனக்கான பாதுகாப்பில் எந்த குறையும் இல்லை என்பதை நன்கு அறிந்த பிறகு ஒவ்வொன்றாக மெதுவாக தடுப்பு சுவரில் இறங்கி தனது பசியை தீர்க்க தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழரசி கூறுகையில், “எங்களுக்கு பறவைகள் விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே தினமும் மொட்டை மாடியில் பறவைகளுக்காக ஆரம்பத்தில் ஒரு பிடி அரிசியை வைத்தேன். நாளடைவில் ஏராளமான கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிட தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் அரிசியை வேகவைத்து கிளிகளுக்கு சாப்பாடு வைத்து வருகிறோம். கடந்த 6 ஆண்டுகளாக கிளிகளுக்கு உணவு அளித்து வருகிறோம். கிளிகளுக்கு மட்டுமில்லாமல் எங்கள் பகுதியில் உள்ள நாய்கள் மற்றும் பிற விலங்குகளுக்கும் உணவளிக்கிறோம். எங்களை தவிர வேறு யாராவது சாப்பாடு வைத்தால் கிளிகள் கீழே இறங்காது. அதனால் பெரும்பாலும் நாங்கள் வெளியே எங்கேயும் செல்வதில்லை அப்படியே சென்றால்கூட அவசரமாக வீட்டுக்கு வந்துவிடுவோம். அதேபோல் தீபாவளி நேரத்தில் எங்கள் பகுதி மக்கள் கிளிகள் சாப்பிட்டு முடிக்கும் வரை வெடி வெடிப்பதில்லை இதை நாங்கள் கேட்கவில்லை. அவர்களாகவே முன்வந்து செய்கிறார்கள். இதுபோன்று கிளிகள் பறவைகளுக்கு உணவளிப்பது ஒருவித மனநிறைவு ஏற்படுகிறது. எனவே எல்லோரும் இதேபோன்று குறைந்தபட்சம் தங்கள் வீடுகளில் வாயில்லா ஜீவன்களுக்கு தண்ணீர், உணவு அளிக்க வேண்டும்” என்றார்.
பின்னர் பேசிய தமிழரசியின் கணவர் கணேசமூர்த்தி, “ஆரம்பத்தில் எங்கள் வீட்டிலிருந்த கொய்யா மரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடுவதற்காக கிளிகள் வந்தன. நாளடைவில் கொய்யாப்பழம் இல்லாததால் அந்த கிளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை பார்த்தோம். அன்றிலிருந்து தினமும் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து கிளிகளுக்கு உணவு அளித்து வருகிறோம். தினமும் 200க்கும் மேற்பட்ட கிளிகள் வந்து சாப்பிட்டு செல்கின்றன. எங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது சாப்பாடு வைத்தால் கிளிகள் மரத்தில் இருந்து கீழே இறங்காது. தினமும் அதிகாலை கிளிகளின் சத்தத்தைக் கேட்டுதான் நாங்கள் அனைவரும் எழுந்திருப்போம். ஒருவேளை தாமதமானால் பெட்ரூம் அருகில் வந்து கிளிகள் கீச் கீச்சென்று கத்தும். அந்த சத்தத்தை கேட்டவுடன் அனைவரும் எழுந்து விடுவோம். இதனால் ஒரு மன அமைதி ஏற்படுகிறது” என்றார்.
இதையும் படிங்க..தற்சார்பு வார்த்தை அல்ல; வாழ்க்கை... சொந்த செலவில் குட்டை அமைத்து விவசாயம் செய்யும் கிராமம்!