திருநெல்வேலி: திருப்பூரில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவிலுக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு அந்த பேருந்து வந்ததும் 1 to 1 எனக் கூறி நாகர்கோவில் செல்லும் பயணிகளை மட்டுமே நடத்துநர் அந்த பேருந்தில் ஏற்றி உள்ளார்.
அப்போது நாங்குநேரிக்கு செல்லும் சில பயணிகளும் அதே பஸ்சில் ஏறி உள்ளனர். அதற்கு இந்த பஸ் நாங்குநேரிக்கு போகாது என வழக்கம் போல நடத்துநர் கூறவும் அதற்கு பயணிகள் இது வழக்கமாக நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்லும் பஸ் தான் எனக்கூறி இறங்க மறுத்துள்ளனர். இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் நாங்குநேரி பயணிகளுக்கும் நடத்துநர் டிக்கெட் கொடுத்துள்ளார். இதனை அடுத்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் பெற்ற பயணிகள் இது 1 to1 பஸ் தானே? எப்படி இடையில் உள்ள ஊர் பணிகளை ஏற்றலாம் என நடத்துநரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாங்குநேரி பயணிகளுக்கும் நாகர்கோவிலில் சேர்ந்த பயணிகளுக்கும் இடையே பஸ்ஸில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நாங்குநேரி ஊருக்குள் கொண்டு வந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயணிகளை இறக்கி விட்டனர். இதனை அடுத்து நாங்குநேரி பயணிகளை அவதூறாக பேசியதாக கிடைத்த தகவலின் பேரில் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் அந்த பஸ்ஸை வழிமறித்து அங்கிருந்து பொதுமக்கள் நாகர்கோவில் பயணிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 1 to 1 என சட்டவிரோதமாக இயக்குவது வெளியே தெரிந்து விடும் என கருதி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காவல் நிலையத்திற்கு செல்வதை தவிர்த்தனர். இதனை அடுத்து நாங்குநேரி பயணிகளை அவதூறாக பேசிய நாகர்கோவில் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.
பிரச்சனை பெரிதானால் அந்த பஸ்ஸை ஓரமாக நிறுத்துவதாக கூறிவிட்டு ஓட்டுநர் நாகர்கோவில் நோக்கி ஓடி சென்றார். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் பைக்கில் பின்னால் துரத்தி சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் அந்த பஸ்ஸை தடுத்து நிறுத்தினர்.
அப்போது நாங்குநேரி சப் இன்ஸ்பெக்டர் கணபதி அந்த பஸ்ஸின் நடத்துநர் முத்தையாவிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அதனை பொதுமக்கள் சிலர் செல்போனில் படம் எடுத்ததை பார்த்த நடத்துநர் என்னை படம் எடுக்காதீர் எனக் கூறிவிட்டு போலீசார் முன்னிலையில் கூச்சலிட்டு தரையில் படுத்து உருண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட படபடப்பில் கலக்கமடைந்த அவர் தண்ணீர் தண்ணீர் என்று கேட்டு கூச்சலிட்டார். அப்போது பஸ்ஸில் இருந்த பயணிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உதவினர்.
உயர் அதிகாரிகள் அரசு அனுமதி இல்லாத பைபாஸ் ரைடர் 1 to 1 என பல பெயர்களில் கூடுதல் கட்டணங்களை வசூலிக்க சொல்லி வாய்மொழியாக உத்தரவிடுவதாகவும் பொதுமக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதில் சிக்கி தினமும் நிம்மதியின்றி பணி செய்வதாகவும் நடத்துநர் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவருக்கு தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தினர். மேலும் தனக்கு மாரடைப்பு நோய் இருப்பதால் எனக்கு நிற்க முடியவில்லை என்று கூறியதும் அதிர்ச்சி அடைந்த போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியதை நடத்துநர் ஏற்க மறுத்தார்.
அதன்பின் பஸ்ஸில் ரகளையில் ஈடுபட்ட நாகர்கோவில் பயணிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகராறு ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். இதனை அடுத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழ்நாடு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் அனுமதி இல்லாமல் 1 to 1 பைபாஸ் ரைடர் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் கூடுதல் கட்டணங்களால் பொதுமக்கள் பாதிப்பதுடன் தற்போது பொது மக்களிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் உருவாகி வருகிறது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் மன அழுத்தத்தால் நிம்மதியின்றி பணி செய்து வருவதாகவும் புலம்புகின்றனர்.
ஆனால் ஆட்சியாளர்களின் நிர்வாக திறமையின்மையால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தங்கள் இஷ்டம் போல செயல்படுவதால் இதுபோன்று பல குழப்பங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "மேஜிக் செய்து பால்வளத்துறையை மாற்ற முடியாது" - அமைச்சர் மனோ தங்கராஜ்