திருநெல்வேலி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் 90 விழுக்காட்டிற்கும் மேல் நீர் இருப்பு இருந்தது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் பாபநாசம் அணை தனது முழுக் கொள்ளளவான 142 அடியை எட்டியது.
இந்தச் சூழ்நிலையில் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான மழை பெய்துவருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி பாபநாசம் அணையிலிருந்து 5,000 கனஅடி உபரிநீராகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு உள்ள பழமைவாய்ந்த முருகன் சிலை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கோயிலில் மண்டபங்களை மூழ்கியபடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பின்றி துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு