திருநெல்வேலி: சீவலப்பேரியில் புகழ்பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு, அண்டை மாவட்டங்கள் மற்றும் பல்வேறு வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.
இந்த கோயிலை நிர்வகிப்பதில், சீவலப்பேரியில் உள்ள யாதவர் மற்றும் தேவர் ஆகிய இரு சமூகத்தினரிடைய பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கோயிலை நிர்வகிப்பதை கௌரவமாகவும், தங்களின் உரிமையாகவும் இரு சமுகத்தினர் கருதி வருகிறனர். இதனால் கொலை செய்யும் அளவுக்கு கடந்த ஆண்டு மோதல் உச்சகட்டம் அடைந்தது.
அதாவது, கோயிலின் பிரதான பூசாரியான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் கோயிலை நிர்வகிப்பதிலும், கோயிலில் கடைகள் கட்டி வாடகை விடுவதிலும் உரிமையை வலியுறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தேவர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கூட்டு சேர்ந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி அன்று சீவலப்பேரியில் வைத்து பூசாரி சிதம்பரத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் சீவலப்பேரியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.
பூசாரி கொலைக்கு நீதி கேட்டு யாதவ சமுதாய அமைப்பு சார்பிலும், ஊர் பொதுமக்கள் சார்பிலும் அப்போது தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கிடையில் மாவட்ட காவல்துறை, கொலையில் ஈடுபட்ட சுமார் 17 பேரை அதிரடியாக கைது செய்தது. இருப்பினும் பூசாரியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும், உரிய நிவாரணம் வேண்டும் என்று போராட்டம் நடந்தது.
பின்னர் ஆட்சியர் விஷ்ணு தலையிட்டு, சமரச பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதனால் சீவலப்பேரியில் ஓரளவிற்கு பதற்றம் தணிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பூசாரியின் உறவினரான மாயாண்டி, ஊருக்கு வெளியே மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை கேள்விப்பட்டு, சீவலப்பேரியை சேர்ந்த அவரது சமுதாய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சீவலப்பேரியில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த நெல்லையிலும் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது. சாதி மோதலால் அடுத்தடுத்த இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருக்கலாம், ஆகையால் போராட்டங்கள் வெடிக்கும் என கருதிய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நெல்லை அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.
கொலை செய்யப்பட்ட மாயாண்டி உடல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளை கைது செய்து, உயிரிழந்த மாயாண்டியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மற்றும் உரிய நிவாரணம் வேண்டும் என்று கோரி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முற்றுகையிடலாம் என தகவல் வெளியானதால் அங்கு 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் குவிக்கப்பட்டிருந்தனர். பின் அங்கு வந்த ஊர் மக்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ”உடலை வாங்க மாட்டோம், இன்னும் இரண்டு தினங்களில் ஒரு லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று யாதவ சமூக அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற சூழ்நிலையில் மாயாண்டி கொலை வழக்கில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கனவே நடைபெற்ற பூசாரியின் கொலை வழக்கில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலையும் நடைபெற்றதாக காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அதாவது தற்போது கொல்லப்பட்ட மாயாண்டி, பூசாரியின் கொலை வழக்கின் விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பு கும்பல் மாயாண்டியை தீர்த்துக் கட்டி விட்டால் சாட்சிகள் வாயை அடைத்து விடலாம் என்று எண்ணி, அதன் பெயரிலேயே மாயாண்டி கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
![கொலை வழக்கில் கைதானவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16906244_nellai.jpg)
ஒரே தரப்பில் இரண்டு கொலை நடைபெற்றதால் நெல்லையில் பெரும் பதற்றம் நீடிக்கும் நிலையில், அவற்றை சமாளிக்க காவல்துறை அதிரடியாக களத்தில் இறங்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளது. இதற்கிடையில் பரபரப்பான இந்த சூழலில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இன்று நெல்லை வருகிறார். அவர் மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து காவல் அலுவலர்கள் உடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
![உளவுத்துறை ஏடிஜிபி டேவிட் ஆசிர்வாதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-02-nellaicommunalmurder-exclusivedetail-scrt-7205101_12112022094240_1211f_1668226360_1019.jpeg)
குறிப்பாக சீவலப்பேரியில் நடைபெற்றுள்ள அடுத்தடுத்து கொலைகளில், உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். எனவே நெல்லை மாவட்ட உளவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஏடிஜிபி மாவட்ட காவல்துறையுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. நெல்லையில் சாதி மோதல் கொலைகளால் பதற்றம் நீடித்து வரும் நிலையில் உளவுத்துறை ஏடிஜிபியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், ”சீவலப்பேரி கொலை வழக்கில் மொத்தம் 14 பேர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு 150 காவல்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வாகன ரோந்து மற்றும் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!