நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார் அணை கடந்த இரு தினங்களுக்கு முன் மதகை திறக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சேதமடைந்தது. இதில் அதிகளவில் நீர் வெளியேறி, வயல்வெளிகளுக்குள் புகுந்தது. மேலும் மேக்கரை - வடகரை சாலை பலத்த சேதம் அடைந்தது. இது குறித்து பல்வேறு செய்திகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
அப்போது பேசிய அவர், "2 ஆயிரத்து 147 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் பயன்பாட்டுக்காக கடந்த 28ஆம் தேதி மேட்டுக் கால்வாய் - கரிசல்காட்டு மதகு வழியாக மொத்தம் விநாடிக்கு 20 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால், தானாக வழிந்தோடும் வழியாக உபரி நீர் வெளியேறியது.
அதனடிப்படையில், செப்டம்பர் 7ஆம் தேதியன்று மேட்டூர் அணை உதவிப் பொறியாளர் முன்னிலையில் செயற்பொறியாளரின் அறிவுரையின்படி மதகை திறக்கப்பட்டது. அப்போது மதகு இயங்க மிக சிரமமாக இருந்தது. இதனையடுத்து, மீண்டும் 8ஆம் தேதியன்று நண்பகல் 12.30 மணிக்கு மதகு திறக்கப்பட்டது. அப்போது, நீரின் உட்புறமாக அடித்து வரப்பட்ட மரக் கட்டை ஒன்று மதகின் கீழ் பகுதியில் மாட்டிக்கொண்டது. அதனால் மதகு முழுவதுமாக கீழே இயங்காத காரணத்தால், மேட்டுக் கால்வாய் வழியாக விநாடிக்கு 30 கனஅடி நீர் வெளிவந்தது.
நீரின் அளவு அதிகரித்ததால் கால்வாயின் பக்கவாட்டு சுவற்றை மீறி நீர் வெளியேறியது. இதனால், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான தார்ச் சாலையின் ஓரத்தில் கரை அரிப்பு ஏற்பட்டதால், நீர் திறப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
மேலும், சேதம் அடைந்த கால்வாய்ப் பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை" என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்வதாக தென்காசி கோட்டாட்சியர் கூறினார்.