நிர்வாகப் பணிக்காக பெரிய மாவட்டங்களைப் பிரித்து, புதிய மாவட்டங்களை மாநில அரசு உருவாக்கி வருகிறது. அதன்படி, கடந்த ஜூலை மாதம், திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
பின்னர், மக்களின் கருத்துகளைக் கேட்டு புதிய மாவட்டங்களுக்கான வட்டங்கள், வருவாய் கோட்டங்கள் ஆகியவைப் பிரிக்கப்பட்டு அரசாணை வெளியானது.
இதையடுத்து, புதிய மாவட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைப்பார் என்று இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இன்று திருநெல்வேலியிலிருந்து தென்காசியைப் பிரித்து, தமிழ்நாட்டின் 33ஆவது புதிய மாவட்டமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, உதயமாக்கினார். பின் நிறைவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தென்காசி தனியார் மஹால் வளாகத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்பாளராக பங்கேற்றார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜலட்சுமி, திருநெல்வேலி கலெக்டர் ஷில்பா, தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிதாக உருவாகியுள்ள தென்காசி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள், வட்டங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
வருவாய் கோட்டங்கள்: தென்காசி, சங்கரன்கோவில்.
வட்டங்கள்: தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், சங்கரன்கோவில், வி.கே. புதூர், செங்கோட்டை.
இதையும் படிங்க: ’ரஜினி கூறிய அதிசயம் நடக்கும்' - அமைச்சர் பென்ஜமின்