தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (36). இவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்குக் கடந்த ஒன்பது வருடங்களாகக் குழந்தை இல்லாத நிலையில், சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது.
கடையநல்லூரில் வசித்து வந்த சதீஷ், ஊரடங்கு காரணமாக, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனது மனைவி, குழந்தையைப் பார்க்க முடியாமல் பரிதவித்து வந்துள்ளார்.
கேரளா செல்ல அனுமதி கேட்டு பலமுறை விண்ணப்பித்தும், அனுமதி கிடைக்காத விரக்தியில், சதீஷ், செங்கோட்டையிலிருந்து கேரளாவுக்குச் சவுக்கு மரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்றின் அடியில் ஸ்டெப்னி டயர் மீது அமர்ந்து பயணித்துள்ளார்.
அந்த லாரி செங்கோட்டையை அடுத்த தமிழ்நாடு-கேரள எல்லைச் சோதனைச்சாவடி வழியாகச் சென்றபோது அங்கிருந்த அலுவலர்கள், காவல் துறையினர் சதீஷைக் கவனிக்கவில்லை.
ஆனால், தமிழ்நாடு சோதனைச்சாவடியைத் தாண்டி, கேரள மாநிலம் ஆரியங்காவில் உள்ள சோதனைச்சாவடி வழியே சென்றபோது, சதீஷின் கால்கள் வெளியே தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட கேரள காவல் துறையினர் லாரியைச் சோதனை செய்தனர்.
அப்போது, லாரியில், சதீஷ் மறைந்திருந்து பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள அலுவலர்கள் சதீஷை அங்கேயே தனிமைப்படுத்தினர்.
எவ்வளவோ முயற்சித்தும், மனைவி, குழந்தையைப் பார்க்க முடியாமல் போன சோகத்துடன் சதீஷ் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கைத் தளர்த்தினால் நிலைமை இன்னும் மோசமாகலாம் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!