திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறள் வாசித்து கூட்டம் தொடங்கியதும் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து கோரிக்கை வைத்துப் பேசினர்.
பின்னர் கூட்டத்தில் மேயர் சரவணன் மற்றும் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசுகையில், 'நெல்லை மாநகராட்சிப் பகுதியில் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சிப்பகுதியில் குடிநீர் இணைப்புக்கு மீட்டர் பொறுத்தமுடிவு செய்யப்பட்டு 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 6,910 வணிக நிறுவனங்களுக்கு மீட்டர் பொருத்தப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு குடிதண்ணீர் வழங்கும் அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் 44 நீர் தேக்கத்தொட்டிகளுக்கு நீர் கொடுக்கப்படும். பின்னர் 15 நாட்களுக்குள் அடுத்த 14 தொட்டிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படும். இதனையடுத்து திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். இதன்பின் குடிநீர் இணைப்பில் மீட்டர் பொருத்தும் பணி நடைபெறும்.
விரைவில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நெல்லை மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிந்தடிக் சாலை அமைக்க 135 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம் ஆகிவற்றால் சாலைகள் சேதமடைந்துள்ளதால் தற்காலிக சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ எனத்தெரிவித்தனர்.
மேலும் கூட்டத்தில் மேலப்பாளையம் ஆடு அறுப்பு மையத்தின் டெண்டர் விடப்பட்ட நிலையில், அதில் முறைகேடு இருப்பதாக மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எதிர்ப்புத்தெரிவித்து டெண்டரை ரத்து செய்யக்கோரிக்கை விடுத்தனர். நெல்லை மண்டலத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் இந்த டெண்டர் விடப்பட்டதாகவும் உடனடியாக இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதனை அடுத்து இந்த தீர்மானமும், மாநகராட்சியில் அலுவலர்கள் நியமன தீர்மானமும் ஒத்திவைக்கப்பட்டது. மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரும்பாலான தீர்மானங்களுக்கு திமுக கவுன்சிலர்களே எதிர்ப்புத்தெரிவித்தனர்.
55ஆவது வார்டு கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் பேசும்போது, மக்கள் அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக எந்தத் தீர்மானமும் வைக்கப்படவில்லை என்றும்; மாநகராட்சிப்பகுதிகளில் சிதிலம் அடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் மக்கள் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக குப்பை லாரிகள் வாங்காமல், சொகுசு கார் வாங்குவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்.
பொதுவாக இதுபோன்ற கூட்டங்களில் மேயர் கொண்டு வரும் தீர்மானங்களுக்கு எதிர்க்கட்சியினர் தான் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஆனால், திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்கள் எதிர்க்கட்சி போல் நடந்து கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் நெல்லை மத்திய மாவட்டச்செயலாளர் மற்றும் மேயருக்கு இடையேயான மோதல் போக்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ‘திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்பாட்டின் அடித்தளம் கல்விதான்’ - முதலமைச்சர் ஸ்டாலின்