திருநெல்வேலி: பிரதமர் மோடி இன்று திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை உள்பட 9 புதிய வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். திருநெல்வேலியில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா ஆளுநரும், புதுசேரி துணை நிலை ஆளுநருமான தமிழசை சவுந்தரராஜன், ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசுகையில், “மக்கள் ரயில் பயணத்தை ரசிக்கிறார்கள். அதை சாத்தியப்படுத்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறார்கள். நானும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான். பிறந்து வளர்ந்த மாநிலம் இதுதான்.
இதையும் படிங்க: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
அதனால் இந்த ரயில் சேவையால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பு, தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக ஒரு கூற்று இருந்தது. ஆனால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமரான பிறகு அது மாறிவிட்டது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு பாஜக அரசு பாடுபட்டுள்ளது என நான் கருதுகிறேன்.
வந்தே பாரத் ரயிலால் மக்கள் மட்டும் இன்றி, இங்கு ராமேஸ்வரம் போன்ற கோயில்களுக்கு வரும் பக்தர்கள், வணிகத்திற்காக வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் இருக்கும்” என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இன்று ஒன்பது புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் மோடி துவங்கி வைத்ததன் மூலம், அதிவேக ரயில்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இன்று தொடங்கப்பட்டு இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பிகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பை அதிகரிப்பதுடன், சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதையும் படிங்க: மன் கி பாத்; காந்தி பிறந்தநாளில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன - பிரதமர் மோடி