துப்புரவுத் தொழிலாளர்கள் நலம் மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய துப்புரவு பணியாளர்களின் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜகதீஸ்ஹர் மணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 'துப்புரவு தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அவர்களுக்கு இங்கு கல்வி, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் சிறப்பாக வழங்கப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்குவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது' என்றார்.
மேலும் மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி , ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் , மாநகர காவல்துறை துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.