திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாடு, திசையன்விளை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ. 25) தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் மாணிக்கம் தாகூர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஜெயக்குமார், சங்கர பாண்டியன், மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "தமிழக ஆளுநர் எல்லை மீறி செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளதை தான், உச்சநீதிமன்றமும் ஆளுநர் வழக்கில் சொல்லி உள்ளது.
ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை தெளிவாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. முன்கூட்டியே இதனை ஏற்று ஆளுநர் செயல்பட்டு இருக்கலாம். தெரிந்தும் தெரியாததைப் போல் ஆளுநர் ரவி நடித்திருக்கிறார். சட்டமன்றம் கொண்டு வந்த மசோதா மீதான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தன் கையில் வைத்துள்ளது, அரசுக்கு எதிரான குற்றம்.
அரசுக்கு எதிராக செய்த இந்த குற்றத்திற்கான தண்டனையை அவருக்கு வழங்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை பணி செய்ய விடாமல் தடுக்கும் சதியை ஆளுநர் செய்துள்ளார். திட்டமிட்ட சதியை கலந்து பேசி செய்துள்ள ஆளுநர், ராஜினாமா செய்வாரா? அவர் செய்ய வேண்டும். தமிழக ஆளுநர் அரச குற்றம் செய்துள்ளார்.
ஆளுநர் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது. நடந்து வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், வெற்றி தேவதை எங்கள் பக்கம் உள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல், பேசி சரி செய்யப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் 15 தொகுதி கேட்கப் போவதாக நான் சொல்லவில்லை. கட்சியினரின் ஆசையாக அது உள்ளது. குஷ்பு எதற்காக திமுகவில் சேர்ந்தார்? பின்னர் ஏன் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார்? ஏன் பாஜகவிற்கு போனார்? என்ற பயணம் இத்துடன் முடியுமா? அல்லது தொடருமா? என பலக் கேள்விகள் உள்ளது.
ஒரு கருத்தை சொல்லும் போது பிரச்னை வராமல் கருத்தை சொல்வது தான் சிறப்பு. எதற்காக அந்த உவமையை அவர் சொன்னார்? அதை சொல்லிவிட்டு பிரஞ்ச் மொழியில் இருக்கிறது என்று சொல்லுகிறார். அவர் சொல்லியதற்கும் பிரஞ்ச் மொழிக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?
அவர் பேசிய வார்த்தை அம்மாவாசைக்கும், அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் போல் உள்ளது. தமிழக காங்கிரஸ் பூரண மது விலக்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் கண்டிப்பாக தேவை. வளர்ச்சி திட்டங்கள் இல்லாமல் நாடு வளராது. அரசியலமைப்புச் சட்டம் குறித்த ஆளுநரின் பேச்சு, பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.
அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக எழுநூறு பக்கங்கள் கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி, அதனை செயல்படுத்த நினைக்கிறது. அதற்கு ஆதரவாக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கிறார். அதுவே பெரிய குற்றம். அதற்காக ஆளுநர் மீது வழக்கு தொடரலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அடி முடி காணாதவர் அருணாச்சலேஸ்வரர்.. கருணாநிதியும் அருணாச்சலேஸ்வரர் தான்..!" - அமைச்சர் துரைமுருகன்!