திருநெல்வேலி: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருவதால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினர்.
நெல்லை பாளையங்கோட்டை நந்தனார் தெருவைச் சேர்ந்த மனோ ஜெபத்துரை, உக்ரைனில் உள்ள கார்கிவ் சர்வதேச மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மருத்துவ படிப்பு பயின்று வருகிறார். மாணவர் மனோ ஜெபத்துரை கூறுகையில், "உக்ரைனில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 15 நாட்கள் அங்கு பதட்டமான சூழ்நிலையை அனுபவித்தேன். தற்போது சொந்த ஊர் திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் எப்படி கல்வியைத் தொடர போகிறேன் என்ற குழப்பத்தில் இருந்தேன் தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த இருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ரயில் ஏற அனுமதிக்கவில்லை
முதன்முதலாக எனது பெற்றோர் சொல்லித்தான் போர் நடைபெறுவது குறித்து தெரிந்துகொண்டேன். விடுதியில் இருந்து யாரும் வெளியே செல்ல வேண்டாம் என தெரிவித்தனர். ஊர் திரும்பும்போது அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்தது. ரயில் ஏற சென்றபோது 200 மீட்டர் தொலைவில் தாக்குதல் நடைபெற்றது. துப்பாக்கிச்சூடு சம்பவமும் நடைபெற்றது.
உக்ரைன் அரசு எங்களை ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை. அந்நாட்டு பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்தனர். பின்னர் தமிழ்நாடு அரசு மூலம் ருமேனியா வரை பேருந்தில் சென்று தொடர்ந்து ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்த விமானம் மூலம் டெல்லி வந்தேன். உன்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இங்குள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் மாணவனின் தாயார் கூறுகையில், "போர் எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாததால் மீண்டும் என் மகனை உக்ரைன் அனுப்ப முடியாது. இங்கேயே மருத்துவம் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: ஆளுநரை வரவேற்ற திருச்சி மேயர்