நெல்லை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது
நெல்லையில் தொடர்ந்த கனமழை
அதன்படி நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் இருண்டு காட்சி அளித்தது. பின்னர் பிற்பகல் 12 மணியளவில் மாநகரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
நெல்லைபேட்டை, டவுன், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம், கே.டி.சி. நகர், தச்சநல்லூர், மேலப்பாளையம், பெருமாள்புரம் என நகர் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திடீர் விடுமுறை
இதற்கிடையில் தொடர் மழை காரணமாக இன்று நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாணவர்களும், பெற்றோர்களும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் தரப்பில் காலையில் எந்த அறிவிப்பும் வராததையடுத்து, மாணவர்கள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர்.
பின்னர் பிற்பகல் பெய்த கனமழையால் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பிற்பகல் முதல் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் இத்தகவல் அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாகக் கொண்டுசெல்லப்பட்டு, பிற்பகல் வகுப்பு முடிந்தவுடன், மாணவர்கள் அவசர, அவசரமாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
திட்டமிடல் இல்லாததால் அவதி
அதே சமயம் உரிய திட்டமிடல் இல்லாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பள்ளியில் சிக்கிக்கொண்ட மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர். பலர் குடை, மழை கோட் எதுவும் கொண்டுவராததால் மழையில் நனைந்தபடி சாலைகளில் நடந்து சென்றனர்.
பல பள்ளிகளில் பெற்றோர்களுக்கு விடுமுறை குறித்து எதுவும் தகவல் அளிக்காததால் அவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குச் சென்று அழைத்துவர முடியாத நிலை ஏற்பட்டது. சில பள்ளிகளில் மாணவர்களை மழை குறையும்வரை பள்ளிகளிலேயே அமரவைத்தனர். பல பள்ளி மாணவர்கள், சாலையில் விளையாடிய வண்ணம் சென்றனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: சிசிடிவி வெளியீடு