தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையென்று சொன்னால் அது வேட்டியும் சேலையும்தான். என்னதான் விதவிதமான ஆடைகள் சந்தைக்கு வந்தாலும் இன்றைக்கும் சேலை மீதும் அதை உடுத்தும் பெண்கள் மீதும் தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க சேலைக்குப் பின்னால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வலியும் வேதனையும் மறைந்திருக்கிறது. திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சேலைகளை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
ஆரம்பத்தில் இவர்கள் கைத்தறிகள் மூலம் சேலைகளை உற்பத்தி செய்துவந்தனர். நாளடைவில் இயந்திரம் மூலம் அதாவது விசைத்தறிகள் மூலம் சேலைகளை நெசவு செய்துவருகின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மின்தடை எனப் பல்வேறு பிரச்னைகளால் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கையை தற்போது கரோனா ஊரடங்கு புரட்டிப் போட்டுள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புளியங்குடி, சிந்தாமணி ஆகிய ஊர்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதை நம்பி சுமார் 5,000 தொழிலாளர்களும், பாவு போடுதல், சாயம் போடுதல் போன்ற பணிகளில் 10,000 தொழிலாளர்களும் அவர்களின் குடும்பமும் உள்ளன.
இவர்கள் நூல்களைக்கொண்டு அழகழகான வண்ணமயமான காட்டன் சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இதற்குத் தேவையான நூல், பாவு, சாயம் உள்ளிட்ட பொருள்கள் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படுகின்றன. முதலில் வெள்ளை நிற நூல்களை பசையில் முக்கி பின்னர் பல்வேறு வண்ணம் கொண்ட சாயங்களில் முக்கி எடுக்கின்றனர்.
அதன்படி பச்சை, மஞ்சள், சிவப்பு, கறுப்பு எனப் பல்வேறு வண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நூல்களை மாற்றி வெயிலில் காயவைத்து பின்னர் இயந்திரம் மூலம் பண்டல் பண்டலாகத் தயார் செய்கின்றனர். கலர் நூல்களை விசைத்தறியில் பொருத்தி அழகான சேலைகள் வடிவமைக்கப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கரோனா தீநுண்மி தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சங்கரன்கோவில் பகுதியில் விசைத்தறி தொழில் முற்றிலும் முடங்கியது.
இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்துவந்தனர். இதைபோல் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சேலைகளை அனுப்பமுடியாமலும் தொடர்ந்து ஆர்டர் வாங்கிய சேலைகளை உற்பத்தி செய்ய முடியாமலும் உற்பத்தியாளர்களும் பெரும் இழப்பைச் சந்தித்தனர்.
இந்தச் சூழ்நிலையில் கடந்த மே மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசைத்தறிகள் தற்போது குறைந்தளவு இயங்கத் தொடங்கின. இருப்பினும் பகல் ஒரு மணிவரை மட்டுமே இயங்க வேண்டும் எனப் பல்வேறு நிபந்தனைகளால் இன்னும் ஆயிரக்கணக்கான தறிகள் இயங்காமல் கிடக்கின்றன.
இதற்கிடையில் ஊரடங்கைத் தளர்த்திய பிறகும் போக்குவரத்து முழுமையாகத் திறக்கப்படாததால் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்திசெய்யப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சேலைகள் தேக்கம் அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு அவ்வப்போது வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்லப்படும்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் பணம் வரத்து இல்லாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் தரமுடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அரசு முழுமையாக ஊரடங்கை விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது தங்களை போன்ற ஜவுளி உற்பத்தித் தொழிலுக்கு தங்குதடையின்றி போக்குவரத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இது குறித்து சேலை உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், "எங்கள் தொழில் மிகவும் முக்கியமானது. எப்படி உணவுக்கு அடுத்து உடை என்பார்களோ அதேபோல் நாங்கள் உடையை தயாரித்து விற்கிறோம். ஆனால் எங்களுக்கு தற்போது மிக கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நெருக்கடியான நிலையில் இருக்கிறோம்.
தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்வதாகக் கூறியுள்ளார். அதுவும் கடனாகத்தான் கொடுக்கிறார்கள். எங்களுக்கு ஒரு தொகையை மானியமாகக் கொடுக்க வேண்டும். மின்சார மானியம் கொடுத்து ஜிஎஸ்டியை ரத்துசெய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இது குறித்து சேலை உற்பத்தியாளர் மாரிமுத்து கூறுகையில், "நாங்கள் கடந்த இருபது ஆண்டுகளாக ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுவருகிறோம். ஊரடங்கு போடப்பட்டது எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு போட்டு இரண்டு மாதம் ஆகிறது. இதுவரை யாரும் எங்களுக்குப் பணம் அனுப்பவில்லை. நாங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்குச் சேலைகளை அனுப்பிவருகிறோம். எங்களுக்குக் கீழ் 300 தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்" என்றார்.
அதேபோல் சேலை உற்பத்திச் சங்கத்தைச் சேர்ந்த பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறுகையில், "சங்கரன்கோவில் பகுதியில் 3,000 விசைத்தறிகளும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2,000 தறிகளும் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக விசைத்தறி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் தடையால் எந்தச் சரக்குகளையும் அனுப்ப முடியவில்லை. ஊரடங்கை முழுமையாக விலக்க போக்குவரத்தை முழுமையாக கொண்டுவந்தால் மட்டும்தான் எங்கள் தொழிலை நாங்கள் நடத்த முடியும் எங்கள் தொழிலுக்கு அரசு எந்த விதமான உதவியும் இல்லாமல் எங்கள் சொந்த செலவில் தான் தொழில் செய்து வருகிறோம்.
மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்கள். மூன்று லட்சம் கோடி ரூபாய் சிறு குறு நடுத்தரத் தொழில்களுக்கு கொடுப்பதாகச் சொல்கிறார்கள். இந்தியாவிலேயே சிறு, குறு, நடுத்தர தொழில்தான் பொருளாதார ஏற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே 10 லட்சம் கோடி ரூபாயை நிவாரணமாக கொடுத்தால்தான் சிறு குறு நடுத்தரத் தொழில்கள் முன்னேற்றமடையும்" என்றார்.