அரசு மருத்துவமனைகள் என்றாலே வசதிகள் குறைவாகத்தான் இருக்கும் என்ற பொதுப்புத்தியைச் சுக்குநூறாக உடைக்கிறது கரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கொடுக்கப்படும் சிகிச்சைகள். கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதிலிருந்து மீண்டு வரும் ஒவ்வொருவரிடம் மனநிறைவான புன்னகை ஒன்றையும் நாம் காணமுடிகிறது.
“நான் பிழைப்பேன்னே நினைக்கல, ஆனா அதிசயம் போல மீண்டு வந்துட்டேன்” என்றுதான் முத்தாய்ப்பாக பேசுகின்றனர், கரோனாவிலிருந்து குணம் பெற்றவர்கள். தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, வயிறார ஆரோக்கியமான சாப்பாடு, சுகாதாரமான கழிப்பறை என அட்டகாசமாக இயங்குகிறது, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள்.
மருத்துவர்களும், செவிலியரும் நடந்துகொள்ளும் விதம் கரோனா அச்சத்தைக்கூட விரட்டிவிடுகிறது என முறுவலிக்கிறார்கள், சிகிச்சை பெற்றவர்கள். இதெல்லாம், சிகிச்சை காலங்களில் ஏற்பட்ட அனுபவங்கள், ஆனால் அதன்பின் ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி இருந்திருக்கும்? சம்பந்தப்பட்டவர்களைத் தேடிச்சென்று கேட்டோம்.
”நான் திருநெல்வேலியில் சிகை திருத்தும் தொழில் செய்துவருகிறேன். பழைய பேருந்து நிலையத்தில் எனக்கு ஓரளவு பதிவான வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். ஊரடங்கு மத்தியில் எனது வாழ்வாதாரமே நிலைகுலைந்து போனது. அரசு மீண்டும் தளர்வு கொடுக்கும் நாளுக்காகக் காத்திருந்தேன். ஆனால் ஜூன் மாதம் எனக்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றேன். ஆனால், குணமாகவில்லை. பின்னர் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு எனக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனக்கு சலூன் கடை, என் வீடு இது இரண்டை விட்டால் வேறெதுவும் தெரியாது. ஆனால், கரோனா உறுதியானதாகக் கூறிய அலுவலர்கள் எனது கடையையும் மூடிவிட்டனர். திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். சுமாராக 15 நாள்கள் சிகிச்சை பெற்றேன்” என்கிறார் சிகைத் திருத்தும் கலைஞர்.
அவரிடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அனுபவத்தையும், அங்கு கடைப்பிடிக்கப்பட்ட தகுந்த இடைவெளி உள்ளிட்ட விவரங்களையும் கேட்டறிந்தோம். அப்போது அவர் கூறுகையில், “கடை உரிமையாளர் என்பதால் அடிக்கடி நான் பணியில் ஈடுபடுவதில்லை. சேவிங் மட்டும் அவ்வப்போது செய்வேன். எப்படி கரோனா வந்தது என யோசித்து முடிப்பதற்குள் என்னை கரோனாவிலிருந்து நெல்லை மருத்துவர்கள் மீட்டுவிட்டனர்.
கடந்த ஜூன் 9ஆம் தேதி எனக்கு பரிசோதனை நடைபெற்றது, மறுநாளே என்னை மருத்துமனைக்கு அழைத்துச்சென்றுவிட்டனர். அங்கு எனக்கு சிகிச்சை குறித்து குறை கூற ஒன்றுமில்லை. உணவு வர சற்று தாமதமாகுமே தவிர சுவையான தரமான உணவுதான் கிடைக்கும். பெரிய விதமான சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை, ஆம்புலன்சில் செல்லும்போதுகூட எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை. ஆனால், கரோனா குணமடைந்து வீட்டுக்கு வந்த பின்னர் அவ்வப்போது மூச்சுத்திணறல் இருக்கிறது.
இப்போது நான் சிகிச்சை முடிந்து வந்தாலும் கூட, அருகிலிருப்பவர்கள் என்னிடம் வந்து பேசத் தயங்குகின்றனர். சிலர் விலகி ஓடுகின்றனர். நான் மருத்துவமனையிலிருந்து வந்து 15 நாள்கள் ஆகிவிட்டன. இன்னமும் என்னை ஒருமாதிரியாகவே பார்க்கின்றனர். தீண்டத்தகாதவன் போல நடத்துகின்றனர். சக ஊழியர்கள் நலம் விசாரித்தாலும்கூட இதுபோன்ற நிகழ்வுகள் வேதனையளிக்கிறது” என்றார்.
தகுந்த இடைவெளி என்ற பதமே தீண்டாமைதானா? முற்றிலும் ஒரு மனிதனை கரோனா காலத்தில் புறக்கணித்துவிட முடிகிறதல்லவா? இந்த இக்கட்டான காலகட்டத்தினை கரோனாவுக்கு முன், பின் என பிரித்தால் பிற்கால தலைமுறையினருக்கு ஒடுக்குமுறைகளின் கூடாரமாகத்தானே காட்சியளிக்கும்.
“என்னை கண்டால் ஒதுங்கி ஓடுவது ஒருபுறமிருக்க, சில பெண்கள் என்னை கண்டதும் ஆடைகளைச் சரிசெய்கிறார்கள். அந்த அளவுக்கா என்னிடம் தொற்று இருக்கிறது? அப்படியெனில் மருத்துவர்கள் என்னை ஏன் வெளியில் அனுமதித்தார்கள். இதை நல்ல விதமாக மட்டும் எடுத்துக்கொண்டு நானும் அப்படியானவர்களிடமிருந்து என்னை விலக்கிக்கொள்கிறேன்” என்றார்.
மருத்துவமனையில் கரோனா குறித்த பயம் ஏற்பட்டதா? என வினவியதற்கு, “மருத்துவமனையில் கரோன குறித்து கூட எனக்கு அச்சம் ஏற்படவில்லை. நான் அனுமதிக்கப்பட்ட மறுநாளே நான் செத்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிவிட்டார்கள். இதையெல்லாம் எங்கு முறையிடுவது என்றுகூட தெரியவில்லை. யாருக்கும் வரக்கூடாத நோய் எனக்கு வந்ததாக எண்ணி பயந்தேன், அதிலிருந்து மீண்டது அதிசயமாக உள்ளது. மருத்துவர்களின் கவனிப்பும், அங்கு இருந்த சுகாதாரமான அமைப்பும்கூட எனக்கு பயம் வராததற்கு காரணமாக இருக்கலாம். எனக்கு கரோனா இருந்த காரணத்தால் என் தொழிலாளி கூட கடைக்கு வருவதில்லை” என்றார்.
கரோனோ என்னும் பெருந்தொற்றிலிருந்து மீண்டுவந்தவர்களை சமூகம் நடத்தும் விதம், ‘இந்த மனிதர்களுக்கு கரோனாவே மேல்’ எனச் சிந்திக்க வைக்கிறது. சமூகம் எப்போது மனிதனை மதிப்பிட்டுக் கொண்டே இருக்கிறது, இப்போது க.மு, க.பி (கரோனாவுக்கு முன், பின்) என இரண்டு மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. அரசு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த பாரபட்சத்தைச் சரிசெய்ய வேண்டும், அதுவே காலத்தின் தேவை.
இதையும் படிங்க: 'வாய்க்கு ருசியா சாப்பாடு; அரசு மருத்துவர்கள் அன்பாகக் கவனிப்பு' - கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மகிழ்ச்சி!