திருநெல்வேலி: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மாநகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா, விலையில்லா மிதிவண்டி வழங்கும் தொடக்க விழா ஆகியவை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாப் பேரூரையாற்றிப் பேசுகையில், “1921இல் பெண்களுக்கு வாக்குரிமையை பெற்றுத் தந்தது, நீதிக்கட்சிதான். இதன் நீட்சியாக திராவிட இயக்கங்களால்தான் கல்வி வளர்ச்சி அடைந்தது. இதன் பின்னர் காமராஜர் முதலமைச்சராக இருந்து மதிய உணவுத் திட்டத்தை தந்து குழந்தைகளை பள்ளிக்கு வர வைத்தார்.
இதையும் படிங்க: பெண்களுக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்’ : விண்ணப்ப பதிவு ஜூலை 24ஆம் தேதி தொடக்கம்
மேலும், பட்டி தொட்டிகளில் எல்லாம் பள்ளிக் கூடங்களை திறந்தார். கருணாநிதி, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பல திட்டங்களை தந்தார். இதனால்தான் இந்திய அளவில் பட்டம் படித்த பெண்களின் சதவீதம் 26ஆக உள்ளது. தமிழ்நாட்டில் பட்டம் படித்த பெண்களின் எண்ணிக்கை 72 சதவீதமாக உள்ளது. எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாடு சட்டமன்றம், காகிதமில்லா சட்டமன்றமாக மாற்றப்பட்டுள்ளது.
இதனை அடுத்து புதிய திட்டமாக பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தக சுமையைக் குறைக்கும் வகையில் காகிதம் இல்லாத பள்ளிகள் உருவாக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவித்து தொடங்கி வைக்க உள்ளார்” என தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்த சபாநாயகர், மாணவ - மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினர். பின்னர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 33 அரசுப் பள்ளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழும், சிறப்பாக செயல்பட்ட 5 பள்ளிகளுக்கு காமராஜர் விருதும் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மானவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Nellaiappar Temple: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு; கைத்தட்டி குதூகலித்த கோயில் யானை!