திருநெல்வேலி: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தையும் கடந்து கனமழை வானம் வெடித்தார் போல மழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் கன மழை ஓயாமல் பெய்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ள நீர் அதிவேகமாக அபாய நிலையக் கடந்த சென்றபடி உள்ளது.
இதனால், அம்மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், சிறிய நீர் நிலை தேக்கங்கள், அணைகள் உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இந்நிலையில், அணைகளில் இருக்கும் நீர் இருப்பு மற்றும் வெளியேற்றப்படும் நீரில் அளவு குறித்து, பொதுப்பணித்துறை விளக்கமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இன்று (டிச.18) பிற்பகல் 3 மணி நிலவரம்:
காரையார் அணை: தாமிரபரணி நதியின் பிரதான அணைகளுள் முக்கியமானதாகக் கருதப்படும் காரையார் அணை (பாபநாசம் அணை என்று அழைக்கப்படுகிறது), அதன் முழு கொள்ளளவான 143 அடியில், 134.5 அடி நிரம்பியுள்ளது. மேலும், இந்த அணையின் நீர் வரத்து 10 ஆயிரம் கன அடி நீராக இருக்கும் நிலையில், அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடி மழைநீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணை: பொதிகை மழையில் அமைந்துள்ள சேர்வலாறு அணை அதன் முழு கொள்ளளவான 156 அடியில், 143.37 அடியை எட்டியுள்ளது.
மணிமுத்தாறு அணை: மாஞ்சோலை மழை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் கன மழையால் அதன் முழு கொள்ளளவான 118.00 அடியில், 109.15 அடி நிரம்பியுள்ளது. மேலும் இந்த அணையிலிருந்து நீர் வரத்தும், வெளியேற்றமும் 6 ஆயிரம் கன அடி நீராக உள்ளது.
கடனாநதி அணை: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கடனாநதி அணையின் முழு கொள்ளளவான 85 அடியில், 82 அடி நிரம்பியுள்ளது. இந்நிலையில் இந்த அணையிலிருந்து மணிக்கு 2 ஆயிரத்து 895 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
வடக்கு பச்சையாறு அணை: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலைப்பகுதிகளின் அடிவாரத்தில் உள்ள, 49.20 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணை, அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. மேலும், இந்த அணையிலிருந்து மணிக்கு 751 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
முன்னதாக, இந்த அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் முன்னர், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தற்போது அணைத்து அணைகளிலிருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதையும் படிங்க: மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறப்பு.. தேனி - திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!