திருநெல்வேலி: கடந்த நான்கு நாள்களாக அடுத்தடுத்து ஐந்து கொலை சம்பவங்கள் திருநெல்வேலியில் அரங்கேறியுள்ளது. கடந்த 13 ஆம் தேதி மேலச்சேவலைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் அடையாளம் தெரியாத நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பிராஞ்சேரியை சேர்ந்த மாரியப்பன் தலை, கால் துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதனையடுத்து கோபாலசமுத்திரம், முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடரும் கொலை
இதனிடையே நேற்று (செப்.16) இரவு பாளையங்கோட்டையை சேர்ந்த இளைஞர் அப்துல் காதர், அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து சில மணி நேரத்தில் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் மற்றொரு கொலை சம்பவம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொடர் கொலைகள் நடைபெறுவதால் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் காவல் துறையினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆய்வு
இந்நிலையில், தென் மண்டல காவல் துறைத் தலைவர் அன்பு இன்று (செப்.17) திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.கொலை சம்பவம் நடைபெற்ற பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷ்ணுவை சந்திந்து மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பு கூறியதாவது, “கொலை நடைபெற்ற பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க 1,500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களை அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பனியன் நிறுவன உரிமையாளரைச் சரமாரியாகத் தாக்கிய கும்பல்