கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 17ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் கடைகள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், எவ்விதமான விரிவான அறிவிப்பும் வெளிவரவில்லை.
இதையடுத்து, நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் முருகன்குறிச்சி பகுதியில் உள்ள அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் மின்விசிறி, ஏசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்க கடைகளில் குவிந்தனர்.
இந்நிலையில், திறக்கப்பட்ட அனைத்து வீட்டு உபயோக கடைகளும் மாநகராட்சி சார்பில் இன்று மூடப்பட்டது. பணிக்கு வந்த ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். முறையான அனுமதி பெற்றே திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித முறையான விரிவான அறிக்கையும் இல்லாததால் கடை உரிமையாளர்கள் கடைகளை திறக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் தற்போது உள்ளனர்.
இதையும் படிங்க: மதுபானக்கடைகளைத் திறக்க வேண்டாம்- சீமான்