திருநெல்வேலி: வேகமாக விரைவடைந்து வரும் நகரங்கள் பல புதிய சிக்கல்களுக்கும் வழிவகுத்து வருகின்றன. ஏற்கனவே இருக்கின்ற நகரங்களில் மக்கள் நெருக்கடிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, அதனை நவீன மயமாக்குவது என்பது உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
அந்த வகையில், நகரங்களின் புதிய தேவையாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது கழிவுநீர் மேலாண்மை. நகர நெருக்கடி, மக்கள் அடர்த்தியால் நகரங்கள், பெருநகரங்கள் அத்தியாவசிய தேவையாக பாதாள சாக்கடைத் திட்டம் மாறியிருக்கிறது.
நெல்லையும் பாதாள சாக்கடைத் திட்டமும்
திருநெல்வேலி நீண்ட காலமாக நடந்து வரும் திட்டங்களுள் ஒன்று பாதாள சாக்கடைத் திட்டம். மாநகராட்சியில், கடந்த 2006ஆம் ஆண்டில் பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய நான்கு மண்டலங்களை கொண்டது திருநெல்வேலி மாநகராட்சி. இந்த நான்கு மண்டலங்களிலும் உள்ள 55 வார்டுகளில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 2017ஆண் ஆண்டு தச்சநல்லூர் மண்டலத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டு, 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் பெறப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க ராமையன்பட்டி என்ற இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி டவுன் பகுதிகளில் ரூ. 219 கோடி மதிப்பில், 417 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. பாளையங்கோட்டை பகுதிகளில் ரூ.424 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த பணிகளை எல் அண்ட் டி என்கிற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக டவுன் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளின் தெருக்கள் தோண்டப்பட்டுள்ளன.
அச்சுறுத்தலாகி வரும் பாதாள சாக்கடை குழிகள்
திருநெல்வேலியில் பாதாள சாக்கடைத் திட்டம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. தற்போதும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டும் குழாய் பதிக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுக்கின்றது.
பல தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு இன்னும் குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளன. பல தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் அப்பகுதிவாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சாலைகளில் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சரியாக மூடப்படாத பள்ளங்களால் விபத்துக்கள் நேர்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். டவுன் மேட்டுத்தெரு அருகே பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மந்திரமூர்த்தி என்ற இளைஞர் விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
கல்லூரி மாணவரான மந்திரமூர்த்தி, குடும்பச்சூழல் காரணமாக தனது கல்லூரி செலவுகளுக்காக பேப்பர் போடும் பணியினை செய்து வந்துள்ளார். விபத்து நடந்த அன்று வழக்கம் போல அதிகாலையில் பணிக்கு சைக்கிளில் சென்ற போது பாதாளா சாக்கடைக்காக தோண்டிய பள்ள்தில் தவறி விழுந்துள்ளார். இந்த விபத்தால் மந்திரமூர்த்திக்கு முதுகுதண்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த காணொளி காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்களும், எல் அண்ட் டி தனியார் நிறுவனமும் மாணவரின் மருத்துவத்திற்கு உதவிகள் செய்துள்ளன.
"பேப்பர் போட்டு வந்த வருமானத்துல தான் என் கல்லூரி செலவுகளைப் பார்த்து வந்தேன். விபத்துக்கு பின்னால என்னால சைக்கிள் ஓட்ட முடியல. அதனால வேலைக்கும் போக முடியல. என்னை மாதிரி வேற யாரும் பாதிக்கப்படக் கூடாது. அதனால பாதாள சாக்கடை பணிகளை வேகமா முடிக்கணும்" என்கிறார் பாதிக்கப்பட்ட மாணவர் மந்திரமூர்த்தி.
விரைந்து பணி முடிக்க கோரிக்கை
இன்றைய காலகட்டத்தில் பாதாளாச்சாக்கடை திட்டம் மிகவும் முக்கியமான ஒன்று தான். ஆனால் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மந்த கதியில் நடக்கும் பணிகளால் பல்வேறு விபத்துக்கள் நடக்கின்றன என்கிறார் சமூக ஆர்வலரான அழகேச ராஜா.
போக்குவரத்து நெரிசல், விபத்துக்களைத் தாண்டி மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக காத்திருக்கிறது பருவமழை. தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்தில் பருவமழை தொடங்கும். ஏற்கனவே மழைநீர் முறையாக வெளியேற வழியில்லாமல் இருக்கும் நகரத்தெருக்களில் பாதாளாச்சாக்கடை பள்ளங்களால் தெருக்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருக்கிறது.
பாதாளச்சாக்கடை பணிகளுக்கான பள்ளங்களில் மழைநீர் தேங்கும் போது தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உண்டு.
திருவேலியில் தற்போது டவுன் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் பாதாளச்சாக்டை பணிகள் நடைபெற்று வருகின்றன. டவுனில் 60 விழுக்காடு பணிகளும், பாளையங்கோட்டை பகுதியில் 20 விழுக்காடு பணிகளும் முடிந்துள்ளது. மழை போன்ற இயற்கை சீற்றத்தின் காரணமாக பணிகள் பாதிக்கப்படுகிறது. இருந்தும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகளை மேற்கொள்ளுவது முக்கியமானதே. அந்த பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பதும் இன்றியமையாதது.
இதையும் படிங்க: தனி ஒருத்தி சங்கரி: குப்பை மேட்டை கடல்போல் மாற்றிய சிங்கப் பெண்!