திருநெல்வேலியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று (ஜனவரி 13) நம்ம ஊரு, நம்ம பொங்கல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 108 பொங்கல் பானை வைத்து பொங்கலிடும் நிகழ்ச்சியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் 2008ஆம் ஆண்டு திட்டமிட்டபடி 4ஏ வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தால், பாஜக அதனை கண்டிப்பாக எதிர்க்கும். 4ஏ வடிவமைப்பு படி அந்த திட்டம் செயல்படுத்தினால் அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். வேறு வடிவத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை கொண்டு வர திட்டமிருப்பதாக மார்ச் மாதம் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திமுக கொண்டு வரப் போகும் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயன்பெறப் போவது மீனவர்கள் அல்ல, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே. பொய்யான தகவல்கள் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. 4ஏ வடிவத்தில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் நாடாளுமன்றத்தில் ராமர் சேது பாலம் இருக்கிறதா என்பதற்கு தெளிவான பதில் இல்லை என்று மட்டும் தான் தெரிவித்துள்ளார். 18,000 ஆண்டுக்கு முன் இருந்ததாக சொல்லப்பட்டுள்ள ராமர் சேது பாலத்திற்கு சில தடயங்கலும் கிடைத்துள்ளது. அமைச்சர் கருத்தை திருத்தி பேசியதற்கு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சரிடமும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சுப ஸ்ரீ மரணம் மற்றும் புதுக்கோட்டை சம்பவம் ஆகியவை தொடர்பாக காவல்துறை விசாரித்து பல்வேறு ஆதாரங்களை வைத்துள்ளது. ஆனால் அதனை வெளியிடக் கூடாது என நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இப்போதுள்ள ஆளுநர்கள் தகுதியானவர்களாக உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஆளுநர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை அவர்களே உணர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆளுநர் செய்யும் செயல் நியாயமானது என்றும், இப்போது முதலமைச்சரான பிறகு ஒரு நியாயம் என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லி வருகிறார்.
எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஒருவித நெருடலை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு உளவுத்துறை சொன்ன தகவலின் அடிப்படையில் செட்(z) வகை பாதுகாப்பை உயர்த்தியிருக்கலாம். இந்தியாவில் குறைவான நபர்களுக்கு மட்டுமே இசட் கேட்டகிரி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் ஆய்வுப்படி மத்திய அரசு அளித்துள்ள பாதுகாப்பை ஏற்றுகொள்ள வேண்டிய நிலை உள்ளது.
தமிழ்நாட்டிற்கு இதுவரை 45 மத்திய அமைச்சர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து பல்வேறு விதங்களில் ஆய்வு செய்து அறிக்கை எடுத்து சென்றுள்ளனர். அவர்களின் பயணத்தின் வெளிப்பாடு வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் தெரிய வரும். தமிழ்நாடு ஆளுநர் 2021ஆம் ஆண்டில் 25 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரை தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள 84 மசோதாவில் 15க்கு மட்டுமே அனுமதி வழங்காமல் உள்ளார். ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவிற்கு விளக்கம் கேட்டுள்ளார்.
மத்திய அரசின் பட்டியலில் உள்ள ஏர்வேஸ் ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு தெளிவு வேண்டும் என ஆளுநர் கேட்டுள்ளதால் இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசுவதில் என்ன தவறு அதனை ஏற்பதும் ஏற்காததும் நமது செயல். தமிழ்நாடு என்பதும் தமிழகம் என்பதும் ஒரே பொருள் தான். ஆளுநர் எந்த காலகட்டத்திலும் எந்த விதமான உணர்வையும் தூண்டி பேசியதில்லை. இவர்கள் ஆளுநரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என செய்கிறார்கள்.
தமிழ்நாடு ஆளுநரிடம் முதலமைச்சர் இணக்கமாக செல்ல வேண்டும். சமீபத்தில் சட்டசபையில் நடந்ததை போன்ற ஒரு சம்பவத்தை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதே பஜகவின் நிலைப்பாடு. ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவை சரி செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆளுநரின் கருத்தை வேண்டுமென்றே திட்டம் போட்டு மாற்றி ஆன்லைன் ரம்மி தொடர்பான மசோதாவில் தவறான கருத்துக்களை பதிவிட்டு ஆளுநர் கையொப்பம் இடவில்லை என பேசுகிறார்கள்.
ஆளுநர் பத்திரிகையாளரை சந்தித்து நேரடியாக பேசாமல் இருப்பதால் தான் திமுக சொல்வதெல்லாம் உண்மை போல் தெரிகிறது. மக்களாட்சிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை மாண்பை ஏற்று ஆளுநர் இங்கு பத்திரிக்கையாளரை சந்திப்பதில்லை. ஆளுநர் பத்திரிக்கையாளரை சந்தித்தால் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரும். திமுக அரசு ஆளுநரை சீண்ட வேண்டாம்.
மத்திய அரசின் மீது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதிமுக அவர்களுடைய பணியை சிறப்பாக செய்துள்ளனர். கொள்கை ரீதியாக எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. எனக்கு முன்னிருக்கும் தலைவர்கள் கட்சியை நல்லபடியாக வளர்த்ததன் வளர்ச்சியே இப்போது தெரிகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இன்னும் 10 ஆண்டுகளில் குழந்தைகளின் கல்வி தலைகீழாக மாற்றப்படும்: அண்ணாமலை