ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, "ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்போம்.
இலங்கை தமிழர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை மூட வேண்டும். Q பிரிவு காவல்துறையை கலைக்க வேண்டும். முதலமைச்சர் இலங்கை தமிழர்களுக்கு அறிவித்த திட்டங்கள் காலதாமதமானது. இருப்பினும் வரவேற்கிறோம்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
காங்கிரஸ்,பாஜக தலைமையில் அமைந்த அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுக்கிறது. ஆனால் திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறார்கள். இலங்கை தமிழர்கள் சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள் என சொல்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.
இலவச பயணம் தேவையற்றது
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்தது தேவையற்றது. ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் என சொல்லும் அரசு எப்படி கடன் வந்தது என தெரிவிக்க வேண்டும். கட்டணம் குறைப்பு செய்யலாம். ஆனால் இலவசம் தேவையில்லை.
பள்ளிகள் திறப்பு மூலம் மக்களை சராசரி வாழ்கைக்கு கொண்டு வர அரசு முயற்சிக்கிறது. ஊரடங்கை மக்கள் விரும்பவில்லை. நோயை விட முடக்கம் என்பது மக்களை மிகவும் பாதிக்கிறது .
அரசியல் தலைவர்களின் படங்கள் கல்வி புத்தகங்களிலும் கைகளிலும் இடம்பெறுவது தேவையற்றது. முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியிருப்பது அரசியல் நாகரீகத்தை காட்டுகிறது" என சீமான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேரவையில் தீர்மானம்