திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 29ஆவது வார்டுக்குள்பட்ட கரீம் நகர், தைய்யூப் நகர் உள்ளிட்ட தெருக்களில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகப் போராடிவருகின்றனர். இருப்பினும் மாநகராட்சி சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் இன்று (அக.6) எஸ்டிபிஐ கட்சியினர் பொதுமக்களைத் திரட்டி மேலப்பாளையம் மண்டல அலுவலகம் உள்ளே பாய், தலையணையுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் காவல் துறையினர் அவர்களை அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அலுவலகத்தின் நுழைவு வாயில் முன்பு பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தரையில் பாய் விரித்து குடியேறும் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்!