நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை 'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பாளையங்கோட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ளன. இந்த பள்ளிகளில் பாளையங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கிறார்கள். இதனால், காலை 9 மணி வரை நெல்லை மாநகர சாலைகள் பரபரப்பாக காணப்படும். ஆட்டோ மற்றும் வேன்கள் பள்ளி மாணவ மாணவிகளை நிறைத்துக் கொண்டு பாளையங்கோட்டை சாலைகளில் செல்வதை பார்க்க முடியும்.
இந்த நிலையில், பாளையங்கோட்டை முருகன் குறிச்சி கதீட்ரல் தேவாலயம் அருகே அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று(ஜூலை 11) காலை நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து பொதுமக்களை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று, இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளை இறக்கி விட்டுவிட்டு, பாளை பேருந்து நிலையம் அருகில் உள்ள மற்றொரு பள்ளிக்கு செல்ல முற்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக வண்ணாரப்பேட்டை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோவின் கண்ணாடி முழுமையாக உடைந்து சிதறியது.
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரும், பள்ளி ஆட்டோவின் ஓட்டுநரும் காயமடைந்தனர். ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவிகளுக்கு லேசான காயம் என்பதால், அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளி மாணவிகள் சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: பேருந்தில் சிக்கி +2 மாணவன் பலி: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்