திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணி செய்துவருகிறார்கள். 15 ஆண்டுகள் வரை பணி செய்யும் தாங்கள் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறோம். தினசரி சம்பளமாக 359 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது.
இந்த ஊதியம் வருடாவருடம் மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டு உத்தரவு வெளியிடப்படும். ஆனால், 2020- 21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள தினசரி சம்பளமாக 634 ரூபாய் மாவட்ட அளவிலான சம்பளம் வழங்க உத்தரவிடவேண்டும். கரோனா காலத்தில் பணிகளில் ஈடுபடும் காவல் துறை, சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
ஆனால், இதுவரை தங்களுக்கு எந்த ஒரு அரசாணையும் வெளியிடப்படவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி தொழிலாளர்கள் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படாமல் தினக்கூலி பணியாளர்களாகவே இருந்துவருகிறோம். எனவே 240 நாள்கள் முடிந்த அனைத்து தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாவட்ட அளவிலான குறைந்தபட்ச ஊதியம் 634 ரூபாய் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணி செய்யும் தொழிலாளர்கள் ஏராளமானோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய புதுமண தம்பதி!