திருநெல்வேலி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, வட்டாட்சியர் மனோஜ் முனியப்பன் தலைமையிலான அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிய மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் வட்டாட்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது ஏன் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சக அலுவலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை கடைப்பிடித்த காரணத்திற்காக வட்டாட்சியர் தண்டிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மனோஜ் முனியனை மீண்டும் உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும், அவரது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பணியிடை நீக்கத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று (ஆக.30) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து மனோஜ் முனியன் மீதான தற்காலிக பணிநீக்கம் நடவடிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்படும் வரை தங்களது இந்த போராட்டம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர். மேலும் மகளிர் உரிமைத்தொகை பணியினை புறக்கணிப்போம் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே சமயம் தற்போது வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் நடத்தி வரும் இடம் என்பது ஆட்சியர் அலுவலகத்தில் முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. ஆட்சியரின் வாகனம் அங்கு தான் நிறுத்தி வைக்கப்படும். மேலும் ஆட்சியர் தனது அலுவலகத்திற்குச் செல்லும் முக்கியமான நுழைவாயில் இதுதான்.
எனவே பிரச்னைக்காக இங்கு வரும் சாதாரண பொதுமக்கள் சிறிது நேரம் நின்று கூட தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த காவல் துறையினர் அனுமதி அளிப்பதில்லை என கூறப்படுகிறது. இதேபோல் பொதுமக்கள் யாரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தவும் காவல் துறையினர் அனுமதி கொடுப்பதில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மணிக்கணக்கில் அந்த இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் கூட, அங்கிருந்த காவல் அதிகாரிகள் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. பெயரளவுக்கு கூட அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரிக்கவில்லை. எனவே அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டம், சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமா என்று பொதுமக்கள் முனுமுனுத்தபடி சென்றனர்.
இதையும் படிங்க: பிரக்ஞானந்தா: மேள, தாளத்துடன் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!