திருநெல்வேலி: தமிழ்நாட்டில் புதிதாக உருவாகிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழையானது பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்த நிலையில், அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தன. இதனால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.
தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி இரவு முதல் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. வீடுகளை விட்டு வெளியேறவும் முடியாமல், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல அத்தியாவாசிய தேவைகள் கிடைக்காமல் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நெல்லையில் ஏற்பட்ட வெள்ளத்தில் உணவு, உறக்கம் இன்றி 39 மணி நேரம் மரக்கிளையில் சிக்கித்தவித்த 72 வயது முதியவரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு வெள்ளத்தின் நடுவே மீட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், பத்தமடை அருகே, கொழுமடை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா(72). இவர் தனது தோட்டத்தை வாழ்விடமாக்கி, 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ஆம் தேதி பெய்த கனமழையில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீரானது, அவர் இருந்த தோட்டத்தினை சூழ்ந்துள்ளது. மேலும், தான் வளர்த்த ஆடுகள் கண்முன்னே வெள்ளத்தில் இழுத்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து, தோட்டப்பகுதியில் அளவுக்கு அதிகமான வெள்ள நீர் சூழ்ந்ததினால், என்ன செய்வது என தெரியாத இவர், அங்கு அருகில் உள்ள மரத்தின் மீது ஏறி அமர்ந்து தூக்கமின்றியும், உணவின்றியும் இரவும், பகலுமாக சுமார் 39 மணிநேரம் தவித்து வந்துள்ளார். பின்னர் இது தொடர்பாக, அவரது மகன் கொடுத்த தகவலின்படி, பயிற்சி பெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்த மீட்புக் குழுவினர் பாதுகாப்பு உபகரணங்களுடன், 1 மணி நேரத்திற்கு மேலாக கடும் சவாலை எதிர்கொண்டு, பின் முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, மழை வெள்ளத்தில் துணிச்சலுடன் செயலாற்றிய அக்குழுவினரை கிராம மக்கள் அனைவரும் பாராட்டினர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த இடங்களில் மத்தியக் குழுவினர் நாளை (டிச.20) ஆய்வு..!