காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் நாட்டின் கல்வி நிலை குறித்தும் எதிர்கால கல்வி தேவை குறித்தும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
இதையடுத்து, நெல்லை டவுனில் உள்ள புகழ் பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு ராகுல் காந்திக்கு பட்டாபிஷேகம் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட அவர், டவுன் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தென்காசி நோக்கி பயணித்த அவர், கரும்புளியூத்து பகுதியில் சாலையோரம் உள்ள மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
சாலையோரம் உள்ள கடையில் இளநீர் குடித்த ராகுல், இளநீர் வெட்டுவதை பார்த்து ஆச்சரியமடைந்து, அவரிடம் மீண்டும் இளநீர் வெட்டுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் விற்பனையாளரின் குடும்பம் குறித்து விசாரித்துச் சென்றார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் சாலையில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசிய ராகுல்காந்தி,
" இந்த பகுதியில் ஏராளமான பீடித் தொழிலாளர்கள் இருப்பதை அறிவேன். சிறுகுறு தொழில்கள் மூலம் தான் நாட்டில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் தற்போதைய மத்திய அரசு சிறு தொழில்களை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதியாக இருப்பதால் தான் பிரதமர் மோடியிடம் சரணடைந்துள்ளார்.
ரிமோட் பட்டனை கட்டுப்படுத்துவது போல முதலமைச்சரை பிரதமர் மோடி கட்டுப்படுத்துகிறார். அதேபோல் தமிழக மக்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என்று பிரதமர் நினைக்கிறார். தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது எனக் கூறினார்.
முன்னதாக ஆலங்குளத்தில் சாலையோரம் நின்று கையசைத்து சிறுவன் ஒருவனை ராகுல்காந்தி காரின் மேல் தூக்கி வைத்து பேசினார்.