திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அடுத்த அடைமதிப்பான்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் குவாரி இயங்கி வருகிறது. இங்கு, நேற்றிரவு (மே 14) ஊழியர்கள் கற்களை அள்ளிக்கொண்டிருந்தபோது பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், ஹிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய ஆறு பேரும் கற்களின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய பகுதிகளிலிருந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இரவு முழுவதும் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஹிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் முருகன் மற்றும் விஜய் இருவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் கற்கள் சரிந்து விழுந்தது தங்களுக்குத் தெரியவில்லை என விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த விஜய் உருக்கமாக தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் ஆறு பேர் இருந்தோம்; தற்போது மூன்று பேர் தான் உயிரோடு இருக்கிறோம். மேலும், ராஜேந்திரன், செல்வகுமார், முருகன் ஆகிய மூவரும் இறந்து விட்டனர்” என்றார்.
இதையும் படிங்க: திருக்கோவிலூர் அருகே 17 வயது பள்ளி மாணவன் கொலை