திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தம்பதியினரை ஆபாச சொற்களால் திட்டும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது அந்தக் காணொலியில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளது.
காணொலியில் உள்ள உதவி ஆய்வாளரின் பெயர் செல்வகுமார். இவர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார்.
தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் செல்வகுமார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மானூர் வடக்குத் தெரு பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள், இவரைக் கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர்.
இதனைக்கண்ட உதவி ஆயவாளர் செல்வகுமார் இளைஞர்களை நிற்குமாறு கூறியுள்ளார். இதனைக் கண்ட இளைஞரின் பெற்றோர், தனது மகனை நிற்கச் சொல்வதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளனர்.
அப்போது இளைஞரின் பெற்றோருக்கும், செல்வகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் இளைஞரின் பெற்றோரை, உதவி ஆய்வாளர் செல்வகுமார் கடும் ஆபாச சொற்களால் திட்டியுள்ளார்.
இதனை அங்கு நின்றிருந்த சிலர் காணொலியாகப் பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளனர். செல்வகுமார் சமீபத்தில்தான் மானூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு சமயத்தில் அயராது உழைத்துவரும் காவல் துறையினரின் செயல் தற்போதுதான், பொதுமக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் தம்பதியினரை இழிவாகப் பேசிய உதவி ஆய்வாளர் செல்வகுமாரின் செயல், பொதுமக்களிடையே துளிர்த்துள்ள காவல் துறையினரின் நன்மதிப்பைச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்; தலைநிமிர்ந்து வருகிறேன்' - மு.க. ஸ்டாலின்