திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த நாகராஜன் - மாரியம்மாள் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் நரேன், மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜன.04) இரவு நரேன் திடீரென வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாளையங்கோட்டை போலீசார், சிறுவன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சிறுவன் நரேன் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பள்ளிக்கு சரிவர செல்லாததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவன் பள்ளி கட்டணம் செலுத்தாததால், சக மாணவர்கள் முன்னிலையில் சிறுவன் நரேனை பள்ளி நிர்வாகம் அவமானப்படுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன வேதனையில்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, உயிரிழந்த மாணவனுக்கு நீதி கேட்டு பள்ளி முன்பு பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை, அங்கிருந்த போலீசார் தடுக்க முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது பேசிய உறவினர்கள், "நாங்கள் போராடுவோம். உயிர் இருக்கும் வரை போராடுவோம்" என ஆக்ரோஷமாக கூறினார்.
இதைத் தொடர்ந்து, போலீசார் அவர்களை தள்ள முயன்றதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், "ஏழைகள் மீது உங்கள் அதிகாரத்தை காட்டாதீர்கள். பணக்காரர்களிடம் சென்று காட்டுங்கள்" என வேதனையோடு கூறினர். மேலும், பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், உயிரிழந்த மாணவன் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
பின்னர், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர். நெல்லையில் ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒரே வாரத்தில் மேலும் ஒரு சம்பவமாக 9ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெருந்துறை துப்பாக்கிச்சூடு; வாடகை வீட்டின் உரிமையாளர் கூறுவது என்ன?